கேரள மாநிலம், கோட்டயம் அருகே குறுகலான சாலையில் வேகமாக வந்த கார், திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோட்டயம் அருகே முக்கூட்டுத்தரை பகுதியில் உள்ள ஆற்றின் மேற்பகுதியில் உள்ள பாலத்தில் குறுகலான சாலை அமைந்துள்ளது. நேற்றிரவு பாலத்தின் மீது ஒரு கார் சென்று கொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த கார், பாலத்தில் செல்வதற்கு பதிலாக பாலத்தை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. வளைவான சாலையில் வேகமாக வந்த கார், வளைவை தாண்டியுள்ள பாலத்தில் அதே வேகத்தில் செல்ல முற்பட்டதால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஆற்றுக்குள் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. கார் கவிழ்வதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், விரைந்து சென்று காருக்குள் காணப்பட்ட ஓட்டுநரை வேகமாக மீட்டனர். காருக்குள் ஓட்டுநர் மட்டுமே காணப்பட்ட நிலையில் அவர் காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.