திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கடந்த 14 நாட்களில் மட்டும் 85 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 1 கிலோ 230 கிராம் தங்கம், 2 கிலோ 800 கிராம் வெள்ளி, 84 அயல்நாட்டு நோட்டுகள், 397 அயல்நாட்டு நாணயங்களும் காணிக்கையாக கிடைத்திருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமயபுரம் வரும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றி உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி அமாவாசை மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.