பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு வந்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது உறவினர்களுடன் வந்த பெண்ணின் தந்தை, விடுதிக்குள் புகுந்து தனது மகளை அடித்து உதைத்து இழுத்து சென்றார். தடுக்க வந்த புதுமாப்பிள்ளையையும், அவரது குடும்பத்தினரையும் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் இந்த காதல் கல்யாண விவகாரத்தை, வேளாங்கண்ணி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு நாகவாரா பகுதியை சேர்ந்தவர் டேனியல். இவரது மகன் ராகுலும், அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்த பெண் வீட்டார்தான் ராகுலின் சமூகத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் காரணம்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த எதிர்ப்பையும் மீறி ராகுலும், கீர்த்தனாவும் 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி ராகுலும், கீர்த்தனாவும் வீட்டைவிட்டு வெளியேறி கோவா சென்றனர். இதையறிந்து, கோவா சென்ற ராகுலின் குடும்பத்தினர் காதல் ஜோடியை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து, அங்குள்ள புகழ்பெற்ற ஆரோக்ய அன்னை பேராலய வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுஒருபுறமிருக்க, மகளை காணவில்லையென காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் கீர்த்தனாவின் தந்தை ராஜா ராவ். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தந்தைக்கு போன் செய்த கீர்த்தனா, தான் ராகுலை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை ஏற்றுக்கொள்ளும்படியும் கூறியதோடு திருமண வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த கீர்த்தனாவின் தந்தை, திருமணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம், வேளாங்கண்ணியிலேயே காத்திருங்கள், அனைவரும் சேர்ந்து பெங்கரூரு வரலாம் என கூறி உள்ளார். அதனை நம்பிய கீர்த்தனாவும், ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அங்கேயே காத்திருந்தார். உறவினர்கள் 15 பேருடன் வந்த ராஜா ராவ், புதுமண ஜோடி தங்கியிருந்த தனியார் விடுதிக்குள் புகுந்து மகள் கீர்த்தனாவை அடித்து, உதைத்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.இதனை தடுக்க வந்த ராகுல், அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி, மாமா பிரகாஷ் ஆகியோரின் தலை, கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ராஜா ராவ் தனது உறவினர்களுடன் தப்பிச் சென்றார். வெட்டுக்காயங்களுடன் கிடந்த ராகுலையும், அவரது குடும்பத்தினரையும் மீட்ட விடுதியில் இருந்த ஊழியர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ளனர்.