மதுரை தெப்பக்குளம் பகுதியில், சுற்றுப்புறத்தை பராமரிக்கவில்லை எனக் கூறி, சாலையோர கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதித்ததால், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள, சுற்றுலா தலமான, மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி, இந்து அறநிலையத்துறை சார்பில் ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள வியாபாரிகளிடமிருந்து தொடர்ந்து தினசரி வாடகை என்ற பெயரில் மாமூல் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனிடையே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், தெப்பக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில், நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏராளமான சாலையோர கடைகள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவில்லை என கூறி, தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநகராட்சி ஆணையாளர், அபராதம் விதித்து அதன் ரசீதுகளை வழங்கினார். அப்போது, வியாபாரிகள் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் ஒரு டன் அளவிற்கு குப்பை தேங்கி இருப்பதாக கூறி, அபராதம் விதித்து விட்டு புறப்பட்டு சென்றார். தினசரி வருமானத்தை நம்பி இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு, ரூ.500 அபராதம் என விதிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் வேதனையை வெளிப்படுத்தினர்.