திண்டிவனம் ரயில்வே சுரங்கப் பாதையில், கழிவுநீர் கலந்து 5 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை கொட்டி தீர்த்த கனமழையால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக காவேரிப்பாக்கம், கிடங்கல், விட்டலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், விடிய விடிய பெய்த கன மழையின் காரணமாக, கழிவு நீர் கால்வாய் நிரம்பி, கழிவு நீருடன் கலந்த மழை நீர் தேங்கியுள்ளது. கழிவுநீர் கலந்திருப்பதால், கருப்பு நிறத்தில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி, சுரங்கப்பாதை பாதி அளவுக்கு மூழ்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.