சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செம்மொழி பூங்கா எதிரே மதுரை ரோட்டில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் கௌதம் நிவாஸ் என்பவர் தங்க காப்புகள் வளையல்கள் செயின்கள் என 207 கிராம மதிப்புள்ள தங்க நகைகளை 29 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளார். இந்நிலையில் அடகுவைக்கப்பட்ட நகைகளை மீட்டு, அவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் சிவகங்கையைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு தகவல் தெரிவித்து அடகு நகையை வங்கியில் இருந்து மீட்டு விற்பனை செய்துள்ளார். பிறகு நகையை சங்கர் பரிசோதித்தபோது அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக வங்கிக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளர் அவர் அப்போதே நகையை மீட்டு சென்று விட்டார். நீங்கள் யார் என கேட்டுள்ளார். இந்நிலையில் இதே போன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த அருண் பாண்டியன், கபிலன் ஆகியோரிடமும் கௌதம் நிவாஸ் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அவர்களிடமும் தங்க காப்பு, வளையல்கள், செயின் உட்பட சுமார் 19 லட்சம் மதிப்புள்ள, 140 கிராம் நகைகளை அடகிலிருந்து மீட்டு, போலி நகைகளை இவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சங்கர் மற்றும் அருண்பாண்டியன், கபிலன் ஆகியோர் தனியார் வங்கி முன்பு முற்றுகையிட்டு மேலாளர் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் சண்டையிட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் திருப்பத்தூர் நகர் போலீசார், நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என கூறினர். ஆனால் புகார் அளிக்க மறுத்த நகை விற்பனையாளர்கள் வங்கியின் முன்பு நின்று திடீரென பெட்ரோலை எடுத்து தலை, உடலில் ஊற்றி தற்கொலைக்கும் முயன்றனர், அப்போது அருகில் உள்ளவர்கள் உடனடியாக காப்பாற்றி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்ப்பட்டது. மாலையில் இருந்து இரவு வரை ஏற்பட்ட இந்த பிரச்சனையால் வங்கி முன்பு பொதுமக்கள் கூடினர். அப்போது நகையை விலைக்கு வாங்க வந்த கடை உரிமையாளர்கள் தங்களை கௌதம் நிவாஸ் மற்றும் நகை மதிப்பீட்டாளர், வங்கி மேலாளர் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றி விட்டதாக கூறினர். இந்நிலையில் திட்டமிட்டு, வங்கி ஊழியர்களுடன் இணைந்து போலி நகைகளை கௌதம் நிவாஸ் விற்பனை செய்தாரா? அல்லது வங்கியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளது? என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க நகை விற்பனையாளர்கள் ஏன் மறுத்து வருகின்றனர் என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். இருப்பினும் இதுகுறித்து உண்மையான தகவல்களை உடனடியாக வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் முற்பட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Related Link 5 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து