கோயம்புத்தூர் வடவள்ளி அருகே காவல்துறையை சேர்ந்தவர்கள் எனக் கூறி கொள்ளை அடிக்க முயன்ற புகாரில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் கஸ்தூரிநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு வந்த இருவர், அவர் வங்கி கணக்கில் அதிக பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். உடைமாற்றிக் கொண்டு வருகிறேன் என உள்ளே சென்ற செந்தில்குமாரை பின்தொடர்ந்த அந்நபர்கள் நகை, பணம் கேட்டு மிரட்டியதையடுத்து, அவர்களிடம் இருந்து தப்பி அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் தப்பிய நிலையில், விசாரணை நடத்தி வந்த போலீசார் வாகன தணிக்கையின்போது ஜீப்பில் வந்த மூவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், அவர்கள் செந்தில்குமார் வீட்டில் திருட முயற்சித்தவர்கள் என தெரியவந்துள்ளது.