வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 19 ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகள் நிரம்பி உள்ளன. திருப்பத்தூரை பொறுத்தவரை ஆண்டியப்பனூர் எகிலி ஏரி, ஜடையனூர் ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி, வெள்ளேரி, ஏலகிரி ஏரி, மாடப்பள்ளி ஏரி, செலந்தம்பள்ளி ஏரி, கோனேரி குப்பம் ஏரி, கம்பிளிகுப்பம் ஏரி, ராஜமங்கலம் ஏரி, பசிலிகுகட்டை ஏரி உள்ளிட்ட 12 ஏரிகளும் வாணியம்பாடியில் ஐந்து ஏரிகளும், ஆம்பூரில் இரண்டு ஏரிகள் என மொத்தம் 19 ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்த ஏரிகள் நிரம்பி உபரியாக வெளியேறும் நீர், பாம்பாற்றில் கலந்து ஊத்தங்கரை பெரிய ஏரி வரை சென்று அங்கிருந்து நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணைக்கு சென்று, விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக பயன்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 40 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.