தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நேர்த்திக்கடனுக்காக, ஸ்ரீ முனியப்பன் கோயிலில் 151 ஆடுகள் வெட்டி, பக்தர்களுக்கு விருந்து வைத்துள்ளார் லாரி ஓட்டுனர். தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தங்கராஜ். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, முனியப்பன் கோயிலுக்கு சென்று வேண்டுதல் வைக்குமாறு அவரது பெற்றோர் கூறி உள்ளனர். உடனே, கோயிலுக்கு சென்ற தங்கராஜ், கிடா வெட்டி பொது விருந்து வைப்பதாக வேண்டிக் கொண்டார். இந்நிலையில் பூரண குணமடைந்த தங்கராஜ், கூறியது போலவே, 6 ஆண்டுகளுக்கு பிறகு, கிடா வெட்டி விருந்து வைத்தார். முனியப்பன் கோயில் முன்பு 151 ஆடுகள் பலியிட்டு அங்கேயே சமையல் செய்து, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பரிமாறி, தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.