சிறுமுகை அருகே பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் 15 லட்சம் கட்லா, ரோகு மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக விடப்பட்டன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கமும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு சங்கமும் இணைந்து மீன் பிடிப்பு குத்தகையை எடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இரு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சுமார் 15 லட்சம் கட்லா மற்றும் ரோகு மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டன. ஆந்திர மாநிலத்திலிருந்து போதிய ஆக்ஸிஜன் வசதியுடன் கன்டெய்னர் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த மீன் குஞ்சுகள், நன்கு வளர்க்கப்பட்டு பெரிய அளவில் இருந்தன. சிறுமுகை அருகேயுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இந்த மீன் குஞ்சுகள் நீர்த்தேக்கத்தில் விடப்பட்டன. வலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மீன் குஞ்சுகள், துள்ளி குதித்து நீந்திச் சென்றன. இந்த முயற்சி, பவானிசாகர் அணையில் மீன் வளர்ப்பை ஊக்குவித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.