24 மணி நேரமும், காவல்துறையினரின் நடமாட்டம் உள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்து சென்ற மூதாட்டியை பின்தொடர்ந்த இளைஞர், நகையை பறித்துக் கொண்டு மூதாட்டியை தள்ளிவிட்டு தப்பிய நிலையில், பொது மக்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லையோ என்ற ஐயம் எழுந்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரத்தில் அழகப்பா செட்டி தெருவை சேர்ந்தவர் 75 வயதான மூதாட்டி சுசீலா. மூதாட்டியின் வீடு உள்ள பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது.கடந்த 30ஆம் தேதி அன்று, மாலை ஆறரை மணியளவில் சுசீலா, தெரு முனையில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவன், கீழே இறங்கி சத்தமில்லாமல் சுசீலாவின் பின்னால் வந்து, ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து செயினை பறித்தான். செயினை பலமாக இழுத்ததால் நிலைகுலைந்த சுசீலா, சாலையில் விழுந்ததையும் பொருட்படுத்தாத அந்த கொடூரன், கண்ணிமைக்கும் நேரத்தில் செயினுடன் பறந்தான். 24 மணி நேரமும் காவல்துறையினர் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே நடந்த செயின்பறிப்பு சம்பவம் பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்தில் கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு, காவல்துறையினர் அலட்சியமாக உள்ளார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதையும் பாருங்கள் - மூதாட்டியிடம் 12 சவரன் செயின் பறிப்பு, திடீர் சம்பவத்தால் நிலைதடுமாறி விழுந்த மூதாட்டி | CCTV