சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இரு தரப்பு மோதல் சம்பவத்தில், 115 பேர் மீது, சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளமனூரில் 2ஆவது நாளாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இளையான்குடி அருகே இளமனூரில் சமூகத் தலைவர்கள் புகைப்பட பலகை வைத்தது தொடர்பாக இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசி தாக்கியதில், 2 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். இரு தரப்பும் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பு அளித்த புகாரின் பேரில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 115 பேர் மீது இளையான்குடி போலீசார் சாதிய வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.