சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் கோரிய வழக்கு. திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சாட்டை துரைமுருகன் மனு தாக்கல். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமின் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால், என்னை கைது செய்தனர். பின்னர் நீதிபதி சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை செய்தனர். கைது செய்யப்பட்டதற்கு எஸ்.பி. வருண்குமார்தான் காரணம் எனவும், விமர்சனங்களை சீமான் முன்வைத்திருந்தார். சமூக வலைதளங்களில் மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக வருண்குமார் எஸ்.பி யால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீஸார் என்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில்,மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.