இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம் ; நாகை மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் ; நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான இஞ்சின் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பறித்துக் கொண்டு கடலில் பரிதவிக்க விட்ட பரிதாபம் : நான்கு நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட மீனவர்கள் நாகை மருத்துவமனையில் அனுமதி. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான பைபர் படகில் குமார், சந்தகுரூஸ், டேவிட், கந்தன் உள்ளிட்ட 4 மீனவர்கள் கடந்த 24 ஆம் தேதி காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் அன்று மாலை கோடியக்கரை தென்கிழக்கே 8 நாட்டில்கள் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீனவர்களிடம் நலம் விசாரிப்பது போல் பேசி பட்டா கத்தியுடன் படகில் ஏறி உள்ளனர். பின்னர் படகில் இருந்த மீனவர்களை சரமரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் பைபர் படகில் இருந்த இரண்டு இன்ஜின்கள், 3 லட்சம் மதிப்பிலான வலைகள், GPS கருவி, வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை திருடி தப்பிச்சென்றனர். அதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் இன்ஜின் இல்லாததால் நடுகடலில் நான்கு நாட்களாக பசியும் பட்டினியமாக தத்தளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மீன் பிடிக்க சென்ற செருதூர் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பார்த்துள்ளனர். அவர்களிருக்கு உணவு வழங்கி தங்களின் ஒரு இன்ஜினையும் மீனவர்களிடம் வழங்கி கரைக்கு திரும்ப உதவி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாகை துறைமுகம் வந்த மீனவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தொடர்ந்து அரங்கேறி வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.