குடிசை மாற்று குடியிருப்புகளை குறிவைத்து வாடகை எடுத்து போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை பட்டினம் பாக்கம் சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக பட்டினம் பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பட்டினம் பாக்கம் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்த போது ஒரு நபர் போதை மாத்திரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது அடுத்து அவரை பிடித்து வீட்டை சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவரது வீட்டில் 2000 வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பெயிண்டர் ஆன ஆதிக் பாஷா 24 என்பதும் இவர் பெயிண்டர் தொழில் செய்து கொண்டே தெரிந்த பல பேருக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக ஆன்லைன் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மட்டும் குறி வைத்து அங்கு வாடகைக்கு சென்று போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் இதே போல கோட்டூர்புரம், தரமணி, கண்ணகி நகர்,புளியந்தோப்பு, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்வதும் இதே போல கடந்த 12 நாட்களுக்கு முன்னதாக சீனிவாசப்ரத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்த போது ஆதிக் பாஷா போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஆதில் பாஷா மீது ஏற்கனவே கண்ணகி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 4 போதை பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் யாருக்கெல்லாம் வலி நிவாரணி மாத்திரைகளை சப்ளை செய்துள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.