அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டால் பழனியே பக்தி பெருக்கில் திக்கிமுக்காடிப்போய் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நெஞ்சமெல்லாம் முருகனின் அருள் நிறைந்து பக்தியில் பக்தர்கள் திளைத்து போயுள்ளனர்..முருகன் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு நடந்துக்கொண்டிருக்க மறுபக்கம் பக்தியோடு சேர்த்து பக்தர்களின் வயிறை நிறையச்செய்ய ஆவி பறக்க வெந்துக்கொண்டிருந்தது இட்லி.அதன் அருகிலேயே இட்லிக்கு தோதாக கிரைண்டரில், உடைத்த கடலை சேர்ந்த தேங்காய் சட்னியும், காரத்தோடு சேர்ந்த தக்காளி சட்னியும், எளிய ஜீரணத்திற்காக மல்லி சட்னியும் அரைந்துக்கொண்டிருந்தது. அதுமட்டுமா இளம் சூட்டில் இஞ்சி, மிளகு, கறிவேப்பிலையை சேர்த்து தாலித்து, நெய் ததும்பி இருந்த வெண் பொங்கலும், வேக வைத்த சிறுபருப்பில் காய்கறிகளையும் சேர்த்து கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரும் பசியால் வாடிய வயிற்றை கிள்ளும் விதமாக இருந்தது. சற்றே திரும்பினால் அளவான சைசில் வட்ட வடிவில் சமையலர்கள் பூரிக்கு மாவு திரட்டிக்கொண்டிருக்க, திரட்டிய மாவு காற்றில் காய்வதற்குள் கொதிக்கும் எண்ணெய்-ல் அலையாட விட்டு, பொங்கி எழுந்த பூரியை உடையாமல் ஜல்லிக்கரண்டியால் எடுத்துக் கொண்டிருந்தார் மற்றொருவர். தேங்காய் பூரணத்தை உள்ளுக்குள் அடைத்து 3ம் பிறை நிலா போல சுட்டெடுக்கப்பட்ட சோமாசு, அதன் அருகிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்த மெது வடையும் தயாராகிக்கொண்டிருந்தது.அதீத சூடால் சுளீர் என சிணுங்கிய தவாவில் சுட்டெடுக்கப்பட்ட ஊத்தப்பத்தின் மீது மழை சாரல் போல தூவப்பட்டிருந்த மிளகாய் பொடி, அதன் அருகிலேயே பிரம்மாண்ட அண்டாவில் கறந்த பாலின் சுவையோடு கலக்கப்பட்ட காஃபியும் இருந்தது. இவை அனைத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபி விருந்தினர்களுக்கு உணவு அரங்கில் தலைவாழையிட்டு, பந்தி பறிமாறப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கும் 10 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.ஒருவழியாக காலை உணவு முடிந்தது என எண்ணி திரும்பிய போது, மதிய உணவுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் சமையலர்கள்... கையால் நறுக்கினால் நேரம் ஆகும் என்பதற்காக மெஷினில் வெட்டப்பட்ட வெங்காயம், தடிமனாக வெட்டப்பட்ட அவரக்காய், நீளமாக நறுக்கப்பட்ட பீன்ஸ், அளவோடு வெட்டப்பட்ட முருங்கைக்காய் வருத்தெடுத்து பொடியாக்கப்பட்ட மிளகாய் தனியா என சமையல் வேலைகள் பரபரப்பாகவே நடந்துக்கொண்டிருந்தது.தொட்டாலே கையில் நெய் ஒட்டும் அளவுக்கு தயாராகிய சாம்பார் சாதம், புளிக்காத கெட்டி தயிரோடு, முந்திரி, உலர் திராட்சை, மாதுளை சேர்த்து கலந்தெடுக்கப்பட்ட தயிர் சாதம் ரெடியாக இருந்தது. அதுமட்டுமா வெள்ளை சாதத்துக்கு ஏத்தவாறு வதக்கிய சின்ன வெங்காயத்தோடு பலவகை காய்கறிகளையும் சேர்த்து கொதித்துக்கொண்டிருந்த சாம்பார், பாஸ்மதி அரிசியில் செய்யப்பட்ட வெஜ் ப்ரிஞ்சி, எண்ணெய்-ல் மூழ்க விட்டு சுட்டெடுக்கப்பட்ட அப்பளம் என கமகம வாசனையோடு தயாரான அனைத்து ரகங்களும் நாக்கில் நடனமாடியது.