கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் தடை பட்டிருந்த மலைரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் துவக்கம்.. மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலைரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.. உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது..உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்பதும் இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதும் தொடர்கிறது..கடந்த 1 ம் தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக மலைரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் அடர்லி ரயில் நிலையம் முதல் ஹில்குரோ ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும், பாறைகளும் தண்டவாளத்தில் சரிந்தன..இதனால் கடந்த 1 ம் தேதி வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு புறப்பட்ட மலைரயில் கல்லார் ரயில் நிலையம் வரை சென்ற நிலையில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது..இதனையடுத்து இருபதற்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் தண்டவாள பாதையில் சரிந்து கிடந்த மண் சரிவுகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்..ஆனால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதிகளில் தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானதோடு மேலும் சில இடங்களில் சரிவுகள் ஏற்பட்டன..இதனால் மலைரயில் சேவை அடுத்தடுத்து தேதிகளில் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.. இடையில் கடந்த 7 மற்றும் 8 ம் தேதிகளில் மட்டும் கூட்டு ராணுவ பயிற்சிக்காக தமிழகம் வந்திருந்த ஜெர்மன் ராணுவ உயரதிகாரிகள் பயணிக்க வசதியாக மலை ரயில் இயக்கப்பட்டு மீண்டும் அடுத்தடுத்த தேதிகளில் ரத்து நீடிக்கப்பட்டு கடந்த மாதம் 31 ம் தேதி வரை போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது..இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து மலைரயிலில் செல்ல ஆர்வமுடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்..இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த காரணத்தினாலும் மலை பாதையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத காரணத்தினாலும் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது..கனமழையால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக தொடர்ச்சியாக ஒரு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலைரயில் இயங்க துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..