கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிவேகமாக சென்ற கார், பேருந்து மீது மோதி நொறுங்கி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று பேரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை செல்லும் புறவழிச்சாலையில், அரியலூரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து கோவில்பட்டியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார், பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதியது. இதில், கார் முன்பக்கம் பலமாக நொறுங்கி, அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த லோகேஷ் அவருடைய மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.