தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோட் படத்திற்கு இசையின் இளவரசன் யுவன் சங்கர்ராஜாதான் இசையமைத்திருக்கிறார்.இந்த நேரத்தில், யுவன் சங்கர் ராஜா கடந்து வந்த பாதையினை சற்றே திரும்பிப் பார்ப்போம்.தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரொம்பவே முக்கியமான இடத்தைப் பெறுகிறார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே கொண்டாடும் இசை அமைப்பாளராக மாறினார். 1997ஆம் அண்டு வெளிவந்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது தொடக்க காலத்தில் சில படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடித்து வசந்த் இயக்கத்தில் வெளியான, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. இந்தப் படத்திற்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜாவின் மார்க்கெட் உயர்ந்தது.தொடக்கத்தில் பாடல்களுக்கு மட்டும் அதிக கவனம் கொடுத்து வந்த யுவன் சங்கர் ராஜா அதன் பின்னர், படத்தின் தன்மையை ரசிகர்களிடம் கடத்த, பின்னணி இசையும் மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டு, பின்னணி இசையிலும் கவனம் செலுத்தினார். இன்றைக்கும் பின்னணி இசையில் ராஜாவாக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக இவரது இசையில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, மங்காத்தா, கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களை வெவ்வேறு ஜானரில் வரிசைப்படுத்தலாம்.நடிகர்களுக்காக, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்காக இசை அமைக்கும் முறையை மாற்றி, படத்தின் கதையைக் கேட்டு, அதற்காக பணியாற்றுபவர் யுவன் சங்கர் ராஜா. தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் ஆதர்சமாக யுவன்தான் இருந்தார். அந்தக் காலத்தில் வித்யாசாகர், மணிசர்மா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத் என எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் யுவன் கொஞ்சம் ஸ்பெஷல். பதின் பருவத்துக் காதலை, மோகத்தை, அல்லாட்டத்தை அவர் பாசாங்கின்றிப் பிரதிபலித்தார். கள்ளங்கபடமற்ற காதலின் இறைத்தூதர் யாரென்றால் சந்தேகமே இல்லாமல் அது யுவன்தான். ‘இது காதலா முதல் காதலா’ என யுவன் கசிந்துருகியபோது ஒரு மாயக்கரம் அரவணைத்துக் கொண்டது. ஒருகணத்தில் வாழ்வை உறைய வைத்திடும் ஜாலங்கள் யுவனின் பாடல்களில் ஏராளம். காதல் நினைவுகளில் கண்கலங்க வைத்தவர்களுள் யுவனின் இடம் தனித்துவமானது. அவரது இசையில் கொண்டாட்டமான இளமைத் துடிப்பு எவ்வளவு பொங்கியதோ அதேயளவு பிரிவின் ஆற்றாமையும் வலியும் கடத்தப்பட்டிருக்கிறது. ‘பறவையே எங்கு இருக்கிறாய்?’ பாடலுக்கு இணையான சோகக் கீதம் தமிழில் மிகக் குறைவு. அப்பாடலில் ‘முதல்முறை வாழப் பிடிக்குதே’ வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சிலிர்த்துப்போவோம். இசையில் காதலின் துள்ளலைக் கொண்டுவருவது எளிது. ஆனால், பிரிவும் சந்திப்புமாக விட்டுவிட்டுத் தொடரும் காதலின் நிச்சயமற்ற தன்மையை, அதன் ஏக்கத்தைக் கடத்துவது கடினம். அதனை அனாயசமாகச் செய்தவர் யுவன். அந்த வகையில் தமிழ்ப் பாடல்களின் நினைவு ஏக்கத்தின் பிதாமகன் யுவன்தான்.எம்.எஸ்.வி - கண்ணதாசன் இணைக்கு அடுத்த இடத்தில் வைக்கத் தகுத்த சாதனை ஜோடி ராஜா - வைரமுத்தா அல்லது யுவன் - நா.முத்துக்குமாரா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். அதற்குப் பிறகு நெஞ்சை உருக்கும் காவிய வரிகளை எழுதும் பாடலாசிரியரோ அவற்றுக்கு நியாயம் செய்யும் இசையமைப்பாளரோ வரவே இல்லை. ஒரு படத்தின் தீம் இசையை உருவாக்குவதில் மாஸ்டர் யுவனேதான்! ராம், பில்லா, மங்காத்தா, புதுப்பேட்டை, சர்வம் என ஏகப்பட்ட உதாரணங்களைசொல்லலாம். ராஜாவை யுவன் மீறிச்சென்ற இடங்களும் உண்டு. அதற்கு ‘பருத்திவீரன்’ மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. எல்லாவற்றுக்கும் மேலாக யுவனின் தத்துவப் பாடல்கள் குறித்து சொல்லியே ஆக வேண்டும். ‘ஒருநாளில் வாழ்க்கை இங்கே’ பாடல், ‘அவன் இவன்’ படத்தில் ‘அவனைப் பத்தி நான் பாடப் போறேன்’ பாடலாகட்டும், ‘I have a dream’ பாடலாகட்டும், ‘ராம்’ படத்தின் ‘மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன?’ பாடலாகட்டும், சமகாலத்தில் யுவனை மிஞ்ச ஆளில்லை.காதலின் கொதிப்பு, தேடல், பிரிவாற்றாமை, வீழ்ச்சி, மீட்பு, இளைஞர்களுக்கான உத்வேகம், நட்பு, துரோகம், பரிதவிப்பு என எல்லா வகைமையிலும் சிறந்த பாடலொன்றை யுவன் இசையமைத்திருக்கிறார். தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர். உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுத்து இசையின்வழி மருந்து கொடுத்த மருத்துவர் யுவன்சங்கர் ராஜா. இசையின் இளவரசன் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் வரும் வரிகளைப் போலவே அழகான நேரம் அதை யுவனின் இசைதான் கொடுத்தது. யுவனின் இசை ஏற்படுத்தும் நினைவின் தாக்கத்தை எப்போதும் எதனாலும் அழிக்கவே முடியாது.