இந்தி நடிகரும் சிவசேனா முன்னணி தலைவருமான கோவிந்தாவின் கைத்துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. கொல்கத்தாவுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை கோவிந்தா தமது வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த போது, அவரது கைத்துப்பாக்கி கையில் இருந்து தவறி விழுந்து குண்டு காலில் பாய்ந்ததாக அவரது மேலாளர் சசி சின்கா என்பவர் தெரிவித்தார். உடனடியாக கோவிந்தா மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும், முழங்காலில் குண்டு பாய்ந்ததற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது நலமாக இருப்பதாகவும் மேலாளர் தெரிவித்தார்.