இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், AMERICA FIRST என்கிற தனது பிரதான கொள்கையை முன்னிலைப்படுத்தி அமெரிக்கர்கள் அல்லாதோர் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததுடன், மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் என்ற மற்றொரு கொள்கையை முன்னெடுத்து அமெரிக்காவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரி விதிப்பை அதிகப்படுத்தியதுடன் பரஸ்பர வரியையும் விதித்தார். அப்போது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 26 சதவிகித வரி விதித்தது அதிகம் என பொருளாதார ரீதியில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சீனா மீது விதிக்கப்பட்ட 104 சதவிகித வரி, கம்போடியா மீது 49 சதவிகிதம் மற்றும் வியட்நாமுக்கு 46 சதவிகிதம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மீதனா வரி சதவிகிதம் குறைவாகவே பார்க்கப்பட்டது. வரி விதிப்புக்கான காலக்கெடு ஜூலை 9ம் தேதி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்துக்குள் அனைத்து உலக நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், பிரிட்டன், இந்தோனேசியா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கொண்ட நிலையில், இந்தியா உட்படப் பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தது. இதில் உடன்பாடு எட்டப்பட்டாமல் இருக்க, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என ஜூலை 30ம் தேதி அறிவித்து ட்ரம்ப் அதிரடி காட்டியுள்ளார். கூடவே ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவததால் இந்தியா மீது அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்தியா அமெரிக்காவின் நண்பனாக இருந்தாலும், இந்தியாவின் வரிகள் மிக அதிகமாக உள்ளது என்றும், பல ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே வர்த்தகம் செய்து வருகிறதென்றும்.எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான வர்த்தக தடைகளைக் இந்தியா கொண்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைந்த அளவில் நடைபெறுகிறது என்றும் தனது ட்ரூத் சோஷியலில் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியா தனது ராணுவ உபகரணங்களை பெருமளவு ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா முன் வரவேண்டும் என குரல்கள் எழும் சமயத்தில், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது என்றும் குற்றம்சாட்டிய ட்ரம்ப், இதற்க்காகவே இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளதும் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் பேசிருயிருப்பது இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது. ட்ரம்ப்பின் வரிவிதிப்பு அறிவிப்பிற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் அறிக்கையை இந்தியா கவனமாக ஆய்வு செய்து வருவதாகவும், நியாயமான மற்றும் சீரான வர்த்தகத்திற்கு பேச்சுவார்த்தையை இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் சிறு குறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிமுனைவோர்களின் நலனை காப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், அமெரிக்காவின் 25 சதவிகித வரிவிதிப்பு ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் தயாரிப்பு பொருள்கள், ஸ்டீல், அலுமினியம், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சோலார் சம்பந்தப்பட்ட பொருள்கள், டெக்ஸ்டைக்ஸ், தோல் பொருள்கள், கடல் பொருள்கள், கற்கள் மற்றும் நகைகள், ஒரு சில உணவு மற்றும் விவசாயப் பொருள்கள் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும், மருந்துப்பொருள்கள், செமி கண்டக்டர்கள், அரிய மற்றும் முக்கிய கனிமங்கள் போன்றவற்றுக்கு இன்னும் வரி விதிக்கப்படவில்லை. இவற்றுக்கும் வரிவிதித்தால் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். 2024-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் 129 பில்லியன் டாலரை எட்டியது. இதில், இந்தியா சுமார் 46 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருதரப்பு வர்த்தகத்தால் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைப்பதை உணர்ந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவும் பயனடையும் வகையில், இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த ட்ரம்ப் இப்போது இந்தியா மீது அதிக வரி விதித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.