தந்தையை இழந்து வறுமையில் வாடும் குடும்பத்தின் பாரத்தை சுமக்க, வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை, நெஞ்சில் ஈரமின்றி அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பற்றி கேட்கும் போது நெஞ்சம் ஒவ்வொரு கணமும் பதைபதைக்கிறது.சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது நிஷாத் - நாசியா தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், வீட்டு வேலைக்காக தஞ்சையை சேர்ந்த 14 வயது சிறுமியை பணியமர்த்தினர். வீட்டிலேயே தங்கி வேலைபார்த்து வந்த சிறுமி, தீபாவளியன்று குளிக்க சென்று விட்டு, குளியலறையில் இருந்து வெளியே வரவில்லை கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த நிஷாத்தும், நாசியாவும் பாத்ரூம் கதவை திறந்து பார்த்தபோது சிறுமி மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்ததாக தெரிகிறது. சிறுமியின் நிலை கண்டு வெலவெலத்த தம்பதி, தங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.உறவினர் வீட்டில் பதுங்கி கொண்ட நிஷாத், தனது வழக்கறிஞர் மூலம் போலீசுக்கு தகவலை தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு சென்று சிறுமியை சடலமாக மீட்ட போலீசார், அவரது உடலின் பல இடங்களில் காயம் இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர். பின்னர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த கையோடு, நிஷாத்தையும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். சிறுமி தானாக இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் உறுதியானது.தீபாவளி தினத்தன்று சிறுமி சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி நிஷாத்தும், அவரது மனைவியும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக நிஷாத் தான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டால் சூடு வைத்து அரக்கத்தனமாக நடந்துள்ளார். அவரது மனைவி நாசியாவும் பெண் குழந்தை என்றும் பாராமல் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தவிர, அன்றைய தினம் நிஷாத்தின் வீட்டுக்கு சென்றிருந்த அவரது நண்பர் லோகேஷும், அவரது மனைவி ஜெயசக்தியும் சிறுமியை காலால் எட்டி உதைத்தும், அயர்ன்பாக்ஸை சூடேற்றி சிறுமி மார்பில் சூடு வைத்தும், மிருகத்தனமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.அரக்கர்களின் அடிகளாலும் உதைகளாலும் வலிதாங்க முடியாமல் இருந்த சிறுமி, ஒரு கட்டத்தில் மூர்ச்சை அடைந்ததாக தெரிகிறது. இதனால் செய்வதறியாது நான்கு பேரும் சேர்ந்து சிறுமியை இழுத்து சென்று குளியலறையில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஒருவேளை சிறுமி உயிரிழந்து போனால், வெளியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்திகளை ஏற்றிவைத்தும் வீட்டைவிட்டு வெளியேறியதாக கைதான தம்பதி தெரிவித்துள்ளனர்.இது ஒருபுறமிருக்க, பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியிடம் தனது கணவர் நிஷாத் நெருக்கம் காட்டியதாகவும், அதனை கண்டு மனம் கொதித்து போய் சிறுமி மீது பொய்யான புகார்களை கூறி கணவரை வைத்தே அடிக்க வைத்ததாக, முகமது நிஷாத்தின் மனைவி நாசியா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இது தவிர தானும், மூங்கில் கம்பாலும், பெல்ட்டாலும் சிறுமியை தாக்கி கொடுமை படுத்தியதாக நாசியா போலீசிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சிறுமி கொலை தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார், லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, முகமது நிஷாத்தின் அக்கா சீமா, நிஷாத்தின் வீட்டில் பணி பெண்ணாக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி ஆகியோரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான 6 பேரையும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று, நேற்றல்ல வேலைக்கு சேர்ந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களாகவே சிறுமியை இந்த கொடூர கும்பல் அணு அணுவாய் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.