கைலாசாவில் ஹோட்டல் வைத்துள்ளதாக கூறி சர்ச்சையான உணவகம் ஒன்று, தற்போது தர்பூசணி பரோட்டா என்ற புது டிரெண்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மதுரையில் இருக்கும் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி என்ற ஹோட்டல் அடிக்கடி புது டிரெண்டை உருவாக்குவதாக கூறி சர்ச்சையில் சிக்கி கொள்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா அறிவித்த கைலாசா நாட்டில் தனது உணவகத்தை திறக்க அனுமதி கேட்டும் கடிதம் எழுதி இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தது. அதை தொடர்ந்து கொரோனா காலம் வந்ததும், மாஸ்க் வடிவில் பரோட்டாவை உருவாக்குவோம் என கூறி வாடிக்கையாளர்களை அலறவிட்டனர். தற்போது தர்பூசணி சர்ச்சை எழுந்துள்ளதால், நாங்களும் சர்ச்சைகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை கூறும் விதமாக தர்பூசணி பரோட்டாவை கண்டுப்பிடித்துள்ளனர் டெம்பிள் சிட்டி ஹோட்டல் மாஸ்டர்ஸ். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, அடிக்கிற வெயிலுக்கு ஆனந்தமாய் சுவைத்திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பரோட்டா மாவில் தர்பூசணி பழத்தை வைத்து அதை பரோட்டாவாக எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் தர்பூசணி பழ பரோட்டாவை சிலர் ஆச்சர்யத்துடன் பார்த்து ஆர்வத்தில் வாங்கி ருசித்தாலும், மற்றொருபுறம், டெம்பிள் சிட்டி உணவகம் தனது வாடிக்கையாளர்களை சோதனை எலி போல மாற்றுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.