கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்த முழு தகவல்களும் வெளியாகியுள்ளன. வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உட்பட, தீர்ப்பின் முக்கிய அம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கரூர் துயர சம்பவத்தை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஆணையத்திற்கு எதிராக தவெக தாக்கல் செய்த வழக்கு உட்பட, சிபிஐ விசாரணை கோரி தாக்கலான மனுக்களின் மீது உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், கரூர் வழக்கு தொடர்பாக எதையும் ஆய்வு செய்யாமல், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தனி நீதிபதி உத்தரவிட்டது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை மேற்கொண்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்குட்பட்ட வழக்கை, தனி நீதிபதி விசாரித்திருக்க கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கரூர் துயர வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. அதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில், இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்று கூறிய நீதிபதிகள், அந்த இரு அதிகாரிகளும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள், மாதாமாதம் அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப்படியாக, கரூர் துயரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கும் அதே நேரத்தில், விசாரணையை அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையமும், சென்னை ஐ கோர்ட்டால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 41 பேர் மரணித்த வழக்கில், கரூர் காவல்துறை.. அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுக்கள் நடத்திய விசாரணை ஆவணங்களை, அஜய் ரஸ்தோகி குழுவிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை மீது மக்களுக்கு சந்தேகம் எழுவதற்கு காவல்துறைதான் காரணம் என்றும், காவல்துறை உயரதிகாரிகள், ஊடகங்களை சந்தித்ததாலேயே மக்களுக்கு சந்தேகம் எழுந்ததாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தவெகவுக்கு கரூரில் ஒதுக்கப்பட்ட அதே இடத்தில், கடந்த ஜனவரி மாதத்தில் வேறொரு கட்சிக்கு கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நிறைவாக, சிபிஐ விசாரணை.. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிபடுத்திய நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு 8 வார அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. தாக்கலாகும் பிரமாணப்பத்திரம்.. நடக்கும் வாதங்களைத் தொடர்ந்து வழங்கப்படும் தீர்ப்புக்கு இப்போதைய தீர்ப்பு உட்பட்டதே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவங்க உள்ளனர்.