பெற்ற மகளிடம் வம்பிழுத்த இளைஞரை கண்டித்தது ஒரு குத்தமா?அதிலும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாககூறி டார்ச்சர் செய்தால் எந்த தகப்பனாக இருந்தாலும் தட்டி கேட்கமாட்டாரா? என்பதே கத்திக்கதறும் இந்த உறவினர்களின் கேள்வி.புதுக்கோட்டை மாவட்டம் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் பொப்பன் என்ற சின்னராஜ். இவரது மகள் குழிபிறையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தினமும் பள்ளிக்கு சென்று வரும்போது அதே ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முருகன் கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. நான் உன்னை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்ளலாமா என்று மாணவியை அடிக்கடி வழிமறித்து தொந்தர செய்து வந்த முருகன், ஒருநாள் உண்மையிலேயே கையில் தாலிக்கயிறுடன் நடுரோட்டில் நின்றுகொண்டு திருமணத்திற்கு சம்மதிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பி ஓடி வீட்டுக்கு வந்து தனது பாட்டி அழகியிடம் மட்டும் நடந்த விவரத்தை கூறி உள்ளார். இதனிடையே சக மாணவிகளின் பெற்றோர் மூலம் முருகனின் அத்துமீறலை அறிந்து கொண்ட சின்னராஜ், இளைஞரை நேரில் அழைத்து தனது மகளுக்கு 14 வயதுதான் ஆகிறது, படிக்கிற சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ளக்கூடாது என கண்டித்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த முருகன் கத்தி ஒன்றை வாங்கி தனது பைக்கில் வைத்துக்கொண்டு தனது நண்பரிடம் சின்னராஜாவை டீக்கடைக்கு அழைத்து வருமாறு கூறி உள்ளார். உணவு அருந்தி கொண்டிருந்த மாணவியின் தந்தை சாப்பாட்டை பாதியில் வைத்தபடி அப்படியே கை கழுவிவிட்டு எழுந்து சென்றார். டீக்கடையில் மதுபோதையில் அமர்ந்திருந்த முருகனுக்கும், சின்னராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கத்தியை எடுத்து வந்து சின்னராஜாவின் வயிற்றில் குத்தினான் முருகன். இதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த சின்னராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் கத்திக்கதறிய மாணவியின் சகோதரி, தன் தங்கையிடம் முருகன் அத்துமீறியது போன்று இனி யாரிடமும் அத்துமீறக் கூடாது என்றும் தன் தந்தையை கொலை செய்ததுபோல் இனி யாரையும் கொலை செய்யக்கூடாது என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.பனையப்பட்டி போலீசார் முருகனை கைது செய்துள்ள நிலையில் வீராணம்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனை அதிகமாக இருப்பதே கொலைக்கு காரணம் எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.