கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நடக்க இருக்கும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளது. குறிப்பாக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், ஓய்வுபெற்ற நீதியரசர் அஜய் ரஸ்தோகியின் பின்னணி குறித்து பார்க்கலாம். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, கடந்த அக்டோபர் 3ம் தேதி அன்று, வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில்தான், கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு மீது நம்பிக்கை இல்லை என்றும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், குழு அமைத்து உத்தரவிட வேண்டும் என்றும் தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அதோடு, சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக மற்றும் பாதிக்கப்பட்டோர் பெயர்களில் வழக்கு தாக்கலானது. இப்படியாக, தாக்கலான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவையும் அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐ-ன் விசாரணைகளை ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும், மாதாமாதம் இந்த குழுவிடம் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் அஜய் ரஸ்தோகியின் பின்னணி என்று பார்க்கும்பொழுது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், ராஜஸ்தான் மற்றும் திரிபுரா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். 2004ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவர், 2018ல் திரிபுரா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2023ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், தேசிய அளவில் பேசப்பட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளின்போது நீதிபதிகளின் அமர்வில் இடம்பெற்றிருக்கிறார் அஜய் ரஸ்தோகி. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவான தீர்ப்பு, முத்தலாக் வழங்குவது குற்றம் என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளின்போது நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக, திருமணத்தை மீறிய உறவுகளை குற்றமாக்குதல், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்குதல் மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழுவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவுகளை வழங்கிய நீதிபதிகளின் அமர்வில் ஒருவராக இருந்துள்ளார். இந்த நிலையில்தான், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கட்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.