தேசிய கல்விக் கொள்கை : கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது...! மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என திமுக ஆட்சிக்கு வந்ததும் அறிவிக்கப்பட்டது. அதோடு, 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர் என பல தரப்பினரிடம் கருத்துகளை கேட்ட இந்த குழு, 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பித்தது.! கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கான பரிந்துரை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.! தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து, தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், தற்போது மாநில கல்விக் கொள்கை வெளியிடப் பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..! அதிமுக ஆட்சியில் 2018-ல் இருந்து 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில், மாநில கல்விக் கொள்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை என்பது தொடரும் எனவும், இரு மொழிக் கொள்கையில் உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வயது 6 எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், மாநில கல்விக் கொள்கையில் 5 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர்த்து, தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் சில அம்சங்களும் மாநில கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப AI , Robotics போன்ற பாடத் திட்டங்களையும் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் தரமான ஆய்வகங்கள், வகுப்பறைகளில் மின் விளக்கு, மின் விசிறி வசதியை உருவாக்கி பாடம் கற்க ஏதுவான சூழலை அமைத்து கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த முடிவில் இருந்து பின் வாங்கப்பட்டது. இந்த நிலையில், புதிதாக வெளியான மாநிலகல்விக் கொள்கையில் மாணவர்களின் கற்றல் திறனை அறிய பொதுத் தேர்வு என்பதற்கு பதிலாக STATE LEVEL ACHIEVMENT SURVEY நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சாதி பாகுபாடு புரையோடி கிடக்கும் நிலையில், அந்த சாதிய ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய எந்த திட்டங்களும் புதிதாக வெளியான மாநில கல்விக் கொள்கையில் இடம் பெறாததும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பள்ளிகளில் இருந்தே சாதி பெருமைக்கு எதிரான மன நிலையை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கவின் படுகொலையில் இருந்து வலுத்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளிலேயே சாதிய வன்முறைகள் அரங்கேறி வருகின்றன...! அதற்கு எதிராக எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லாததும் கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மாநில கல்விக் கொள்கையில் இருக்கும் பல பரிந்துரைகள் குறித்து, கொள்கையை வடிவமைத்த குழுவினரே சந்தேகம் கிளப்பியுள்ளனர். கொள்கையில் இருக்கும் பெரும்பாலான அம்சங்களை தாங்கள் பரிந்துரைக்க வில்லை என சொல்கிறார்கள்.! மேலும், புதிதாக வெளியாகியுள்ள மாநில கல்விக் கொள்கையில் அரசின் தற்போதைய திட்டங்கள், விபரங்களே அதிகளவில் இடம் பெற்றிருக்கிறது எனவும், தொலைநோக்கு பார்வையுடன்,கல்வியை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தி கொண்டு செல்லும் அளவுக்கு எந்த திட்டமும் இல்லை என சொல்லப்படுகிறது. மேலும், 2 ஆண்டுகளாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினரை அழைத்து கௌரவப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. குழு கொடுத்த பரிந்துரையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைக்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் அறிக்கை வெளியானது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை முக்கிய அம்சங்கள் :மத்திய அரசு கொண்டு வந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கை-2025-ஐ தற்போது வெளியிட்டு இருக்கிறது. அந்த கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-* கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் குறைதீர் கற்பித்தலை வழக்கி வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவர சிறப்பு கவனம் செலுத்தப்படும். முதல்தலைமுறை கற்போர், பழங்குடியினர் மற்றும் பெண் குழந்தையினை பள்ளியில் தக்க வைப்பதற்கும் அவர்களின் கற்றல் விளைவுகளை முன்னேற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.* வளரிளம் பருவத்தினர் பாகுபாடு, பாலின அடிப்படையிலான வன்முறை, முடுவெடுக்கும் திறன் முதலிய வாழ்க்கைத் திறன்சார் சமூக சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சரியானவற்றை தெரிந்தவர்களாக, நெகிழ்வுத்தன்மை உடையவர்களாக, திறன் பெற்றவர்களாக வளர்ந்திடத் தேவையான கலைத்திட்டம் இணைக்கப்படும்.* 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் படிக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம்சார் திட்டத்தினை மாநில அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.* ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு 2 முறை தங்கள் கால அட்டவணையில் நூலக நாளினை தவறாமல் நடைமுறைப்படுத்தி, மாவட்ட அல்லது சிறப்பு நூலகத்தில் நாள் முழுவதும் குழந்தைகள் படிப்பதை உறுதிசெய்யவேண்டும்.* மாணவர்களின் திறன்கள் மற்றும் தரவுகளை சேகரிக்க பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு ஆய்வுகளை (எஸ்.எல்.ஏ.எஸ்.) தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும் இந்த திட்டத்தில் தேவையான மாற்றங்களை கொண்டுவரவும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.* செயல்வழிக் கற்றல், செயல்திட்ட வழிக்கற்றல், செய்து பார்த்து கற்றல், கலை மற்றும் விளையாட்டுகள் ஒருங்கிணைப்பு மற்றும் பொம்மைகள் வழிக் கற்றல் போன்ற கற்றல் முறைகளை ஊக்குவித்தல் வேண்டும்.* ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இருமொழிகளையும் பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்து கொள்ள முடியும் என்பதை உறுதிசெய்வதே முதன்மை நோக்கம் ஆகும். 2006 தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தின் விதிகளின்படி மாணவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சமூகத் தேவைகளின் அடிப்படையில் கூடுதலாக தம் தாய்மொழியை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கற்றல் இடைவளிகளை குறைக்கலாம்.* தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்கவேண்டும். சிலம்பம், சடுகுடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் போன்ற உள்நாட்டு, நவீன விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இணைக்கவேண்டும். அதில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கவேண்டும்.* மனப்பாடத்தின் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையில் இருந்து பாடக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவினை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறவேண்டும்.* 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் தேக்கமின்மை கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது(அதாவது ஆல் பாஸ்). இந்த கொள்கை தேர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்ட ஆண்டு இறுதித் தேர்வுகளில் இருந்து விலகி தொடர்ச்சியான மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்த திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளை வலியுறுத்துகிறது. தனிப்பட்ட உதவி மூலம் மாணவர்களுடைய திறன் அடைவை உறுதி செய்து, 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சியினை உறுதிசெய்யவேண்டும்.* எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படவேண்டும். தொடர்ச்சியான திறன் அடிப்படையிலான அகமதிப்பீடுகள் மூலம் பாடப்பொருள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் கல்விசார் ஆயத்தநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் படிக்கும் ஆண்டினை அவர்களை ஆயத்தப்படுத்தும் மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக்கும் ஆண்டாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை தேர்வு சார்ந்த மன இறுக்கத்தை குறைக்க உதவுவதோடு பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாக தயாராவதை உறுதி செய்து, அவர்கள் பாடக்கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொள்ள ஊக்கப்படுத்தும்.மாநில கல்விக் கொள்கையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பது, பிளஸ்-1 வகுப்புக்கு இனி பொதுத்தேர்வு கிடையாது என்பதை காட்டுகிறது. இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, 'பிளஸ்-1 பொதுத்தேர்வு இனி தேவையில்லை என்றுதான் அதை எடுத்துவிட்டோம். நடப்பாண்டில் இருந்தே அதை செயல்படுத்த உள்ளோம்' என்றார்.