2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்த செஞ்சி மஸ்தான், அண்மையில் மாற்றப்பட்ட தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தேர்வான செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோனதற்கு கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனின் தலையீடே முக்கிய காரணம் என உடன்பிறப்புகள் மத்தியில் பேசப்படுகிறது. கடந்த 2023-ல் நடந்த மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் கைதான மருவூர் ராஜாவுக்கு, செஞ்சி மஸ்தானின் மகன் மோத்தியார் அலியும், மருமகன் ரிஸ்வானும் நெருக்கமானவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மருவூர் ராஜாவுடன் இருக்கும் இவர்களது புகைப்படங்கள் அப்போது வெளியாகி செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, செஞ்சி மஸ்தானின் மகனும், மருமகனும் கட்சி பொறுப்பில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீக்கப்பட்டனர். பல்வேறு நிலப்பிரச்னைகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக, கட்சி தலைமைக்கு ஏற்கனவே புகார்கள் வந்த நிலையில், மரக்காணம் கள்ளச்சாராய பலி சம்பவத்திலும் இவர்களது பெயர் அடிபட்டதால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, செஞ்சி மஸ்தான் கட்சியினருக்கு எதுவுமே செய்ததில்லை என்ற ஆதங்கம் உடன்பிறப்புகள் மத்தியில் ஒருபுறம் நிலவி வந்தாலும், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மகனும், மருமகனும் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு ஒப்பந்தத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதாக, தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கட்சித் தலைமை, செஞ்சி மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியை பறித்ததாக சொல்லப்படுகிறது. செஞ்சி மஸ்தானின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனாலும், அவரது மகன் மற்றும் மருமகனின் ஆட்டம் குறைந்தபாடில்லையாம். இந்த இருவரும், வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயல்வதாக கட்சி தலைமைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஞ்சி மஸ்தானை நேரில் வரவழைத்து அப்போதே கண்டித்ததாக கூறப்படுகிறது. செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனின் தலையீடு கட்சியில் மட்டுமின்றி அரசு நிர்வாகத்திலும் நீண்டதால், அமைச்சர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.