இஸ்ரேல் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிடித்து வைத்திருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுத்துவிட்டனர். 2 ஆண்டுகளாக உறவுகளைப் பிரிந்து தவித்து வந்த இஸ்ரேலியர்கள், விடுதலை செய்யப்பட்ட நேரத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் - காஸா இடையே, 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர், கடந்த 10ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தை ஏற்ற இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்து வருகின்றனர். முன்னதாக, பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகளை பல கட்ட பேச்சுவார்த்தையின் நீட்சியாக ஹமாஸ் படையினர் விடுவித்தனர். எனினும், 48 பேர் அவர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததால், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் இணங்கி வந்தது. இந்த நிலையில்தான், பணயக்கைதிகளை விடுவித்துள்ளனர்.2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினரால் அதிரடியாக கடத்தப்பட்டு, சிறைவைக்கப்பட்ட தங்களது உறவுகளை நினைத்து, கவலையும் கண்ணீருமாக இஸ்ரேல் மக்கள் காத்திருந்தனர். கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா..? என்ன நிலை? என்று கவலை தோய்ந்த நிலையில் காத்திருந்த நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டபோது ஆனந்த கண்ணீரில் மூழ்கினர். சுமார் 738 நாட்களுக்குப் பிறகு வெளியுலகைப் பார்த்த பணயக்கைதிகள் பெற்ற மகிழ்ச்சியைத் தாண்டி, அவர்களின் உறவினர்கள் பெற்ற மகிழ்ச்சி அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.