தவமிருந்து பெற்றெடுத்த தனது ஒரே ஒரு மகனையும் பறிகொடுத்துவிட்டு தலையிலும் நெஞ்சிலும் அடித்து கத்திக் கதறும் இந்த தாய்க்கு அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களின் பதில்தான் என்ன என்பதே பலரது ஆதங்கம்.திருச்சி மாநகர் பட்டவர்த்தர் ரோடு காளியம்மன் கோவில் தெருவில் பானை விற்கும் தொழில் செய்து வருபவர் ராஜேஷ்-சிவரஞ்சனி தம்பதி. இவர்களது ஒரே மகனான விரித்திவ் அஜய் 7 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஆண்டாள் தெருவில் தனது நண்பர்களுடன் இரவு விளையாடி கொண்டிருந்தான். மாநகராட்சியின் மின்கம்பத்தில் மின்சார பணிகளை செய்த ஊழியர்கள் மின்ஒயரை அப்படியே பாதுகாப்பற்ற முறையில் விட்டுவிட்டு சென்றனர். இதனை அறியாத சிறுவன் மின்கம்பத்தின் அருகில் சென்றபோது ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். அருகே உள்ளவர்கள் சிறுவனை மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் சிறுவனை காப்பாற்ற இயலவில்லை.. விளையாட சென்ற தனது மகனின் விதியே முடிந்துவிட்டதே என கண்ணீர் வடித்த சிறுவனின் தாய் சிவரஞ்சனி, தன் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாட இன்னும் 10 நாட்கள் உள்ளது, அதற்குள் இறந்த நாள் முந்திக்கொண்டதாக கதறினார்.இதேபோல் ஆண்டாள் வீதியின் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின் ஒயர்கள் உள்ளதாக குற்றம்சாட்டும் சிறுவனின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட மாநகராட்சி மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கேட்டபோது, கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்த சபரி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்தான் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.