தவெக நிர்வாகக்குழு கூட்டம் சென்னை பனையூரில் நடந்து முடிந்த நிலையில், தவெகவின் முக்கிய பொறுப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், இணைப் பொதுச்செயலாளர் சிடி.ஆர் நிர்மல் குமார், துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசியபோது பல கேள்விகளுக்கு பதிலளித்தனர். கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தவெகவின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிப்போன நிலையில், விஜய் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இனி எந்த முடிவை எடுத்தாலும் அனைவரது கருத்தும் கேட்கப்பட்டு பரவலாக்கப்பட வேண்டும் என்பதோடு, அன்றாட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க நிர்வாக குழுவை நியமித்து அறிவித்திருந்தார் விஜய். அதன் அடிப்படையில், தவெக பொதுச்செயலாளர்கள் உட்பட சமீபத்தில் சிறைக்கு சென்று வந்த கரூர் மா.செ மதியழகன் வரை பலரும் குழுவில் உள்ளனர். விஜய்யின் உத்தரவின் பேரில் குழு அறிவிக்கப்பட்ட முதல் நாளே நிர்வாக குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில்தான், கரூர் துயர சம்பவத்தில் அமைதியாக இருந்தது ஏன் என்பதில் துவங்கி, மக்களை அழைத்து வந்து சந்தித்தது வரை பல கேள்விகளுக்கு சி.டி.ஆர் நிர்மல்குமார் பதிலளித்தார். நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசியதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்றவர், கரூர் விவகாரம் தொடர்பாக தங்களிடம் பல ஆதாரங்கள் இருப்பதாகவும், உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ அதிகாரிகளிடம் அதனை சமர்ப்பிப்போம் என்றும் கூறினார். கரூர் வரும்பொழுது வழி நெடுகிலும் மக்கள் கூட்டத்தை கடந்து வருவதற்கே விஜய்க்கு தாமதம் ஆனதாகவும், கட்டுப்படுத்த வேண்டியது போலீஸாரின் கையில் இருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, சம்பவத்தன்று தவெக நிர்வாகிகள் யாரும் பாதிக்கப்பட்டவர்களோடு நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரிய அளவில் இருந்து வருகிறது. இதற்கு பதிலளித்த நிர்மல் குமார், அசம்பாவிதம் நடந்த இரவன்று, தான் உட்பட தவெக பொதுச்செயலாளர்கள் அனைவரும் கரூருக்கு வெளியில் காத்திருந்ததாகவும், மக்களை சந்திக்க போலீஸ் அனுமதிக்கவில்லை என்று கூறினார். அதோடு, தவெக கொடி கட்டிய எந்த வாகனத்தையும் கரூருக்கு அனுமதிக்கவில்லை என்றவர், தவெக நிர்வாகிகளை போலீஸார் அடித்து விரட்டியதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். பொதுநிகழ்ச்சிகளில்தான் பங்கேற்கவில்லையே ஒழிய, யாரும் தலைமறைவாக இருக்கவில்லை என்றும் விளக்கிய நிர்மல் குமார், கட்சியை முடக்க பல வேலைகள் நடந்ததாகவும், இதற்கெல்லாம் தாங்கள் அடங்கிவிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார். நிறைவாக, அதிமுக.. பாஜகவின் கூட்டணி கனவிலும் குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறது தவெக. ஆம், இரு கட்சிகளின் கூட்டணி அழைப்பு தொடர்பான கேள்விக்கு, ஒரு மாதத்திற்கு முன்பு வரை எந்த நிலைப்பாட்டில் இருந்தோமோ, அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம் என்று கூறினார் நிர்மல் குமார். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றதோடு, விஜய்தான் தவெகவின் முதல்வர் வேட்பாளர் என்று தொடர்ந்து முழங்கி வந்தது தவெக. எனினும், கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு அதிமுக, பாஜக கூட்டணிக்குள் தவெக வந்துவிடும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது தவெக நிர்வாக குழு. மேலும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சுற்றுப்பயணம் தொடர்பாக அரசு முறையான வழிகாட்டுதலை வகுத்த பிறகு விஜய் மீண்டும் பயணம் செல்வார் என்றும் கூறியுள்ளார் நிர்மல்குமார். குழுவில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், தலைவர் விஜய்யின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் கூறிய நிர்வாக குழுவினர், அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்.