கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் இஸ்ரேலும் - ஈரானும் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இருநாடுகளும் கடந்த 24ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. ஆனால் 23ஆம் தேதி தொடங்கி போர் நிறுத்தம் அமலுக்கு முன்பு வரையிலான 24 மணி நேரத்தில் அதிரடியாக பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதையெல்லாம் இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது...இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அமெரிக்கா கடந்த ஜூன் 22ஆம் தேதி ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு “நீங்கள் இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என எச்சரிக்கை விடுத்தது அமெரிக்க அரசு...தொடர்ந்து கத்தாரின் வான்வழி மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பயணிகள் விமானங்களை அவசர அவசரமாக திருப்பி அனுப்பினர். சில முக்கியமான விமானங்கள் வேறு இடங்களில் தரையிறங்கின. தொடர்ந்து அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என “உண்மையான அச்சுறுத்தல்” வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. ஈரான் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ஈரானின் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்திலேயே ஈரானின் புரட்சிகர காவலர் படையும் அச்செய்தியை உறுதிப்படுத்தியது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் பலம் அல்ல, பலவீனங்கள் எனவும் தெரிவித்தது. அதேசமயம், தாக்குதலின் இலக்கு என்பது கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் என்றாலும், அதன் இறையாண்மை இந்த தீவிரமான தாக்குதல் மூலம்((என்ன மீறப்பட்டுள்ளது?)) மீறப்பட்டுள்ளதாக கத்தார் அரசு கண்டனம் தெரிவித்தது. மேலும், தோஹாவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அந்த தளம் காலி செய்யப்பட்டதால், தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை எனவும் தெரிவித்தது. இந்த தாக்குதல் குறித்து விவரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பலவீனமானது, எதிர்ப்பார்க்கப்பட்டது, திறம்பட எதிர்கொள்ளப்பட்டது” என்றார். ஆனால் அதற்கு பிறகு அவர் வெளியிட்ட செய்திகளில் சமரசத்துக்கான தொனியே காணப்பட்டது. தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்கு ஈரானுக்கு நன்றி என தெரிவித்த அதிபர் ட்ரம்ப், அவர்கள் தங்கள் மீதான கோபத்தை வெளிபடுத்திவிட்டனர், இனி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம் எனவும் குறிப்பிட்டார். பின்னர் தனது நெருங்கிய நண்பரான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் நடந்தாலும், சண்டையை முடிப்பதற்கான நோக்கம் தான் என்பது தெளிவாக இருந்தது. இதற்கிடையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஈரானியர்களை நேரடியாகவும், ரகசிய வழிகளிலும் அணுகியதாக சொல்லப்படுது. அதற்கு பிறகு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், செயல்பாட்டில் உள்ள இறுதிப் பணிகள் நிறைவடைய ஒரு சலுகை காலம் வழங்கப்படும், அதன் பின்னர், அந்த ஒப்பந்தம் ஆறு மணி நேரத்தில் அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். இனி, இந்த மோதல் "12 நாள் போர்" என்று அழைக்கப்பட வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, மீண்டும் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியது. ஈரானிலிருந்து ஏவுகணைகள் வந்து கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்லுமாறும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தது. கிட்டதட்ட 60 நிமிடங்களுக்குள் ஈரான் 3 சுற்றுகளாக ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்தது. அதே நேரம் இஸ்ரேலும் 'கடைசி சுற்று' ஏவுகணைகளை தங்கள் மீது ஏவியதாக ஈரான் குற்றம் சாட்டியது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பின்பு அதை அறிவித்த அதிபர் ட்ரம்ப் ஆத்திரத்தில், போர் நிறுத்தம் அமலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!' இருநாடுகளும் அமைதி அடைய வேண்டும் என டிரம்ப் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய அரசாங்கமும், ஈரானிய அரசாங்கமும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தன. இதன்மூலம் கடைசி நிமிடம் வரை இருநாடுகளும் மோதல் போக்கையே கையில் வைத்திருந்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது..