ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடக்க வேண்டிய பிரசித்தி பெற்ற நேரு கோப்பை படகு போட்டி, வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட சோகத்தை தொடர்ந்து மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் ஆலப்புழா மாவட்டம் புன்னமடை காயலில் பெரும் ஆரவாரத்துடன் இந்த படகு போட்டியை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் துவக்கி வைத்தார். பெவிலியனில் உள்ள நேருவின் சிலைக்கு மலர் தூவியதும், மாநில அமைச்சர்கள் கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தனர்.இந்த போட்டியில் சுண்டன் வள்ளங்கள் எனப்படும் 19 பாம்பு படகுகள் பங்கேற்றன. ஹீட்ஸ் எனப்படும் ஐந்து தரவரிசைகளாக படகுகள் போட்டியில் பங்கேற்றன. முதலாவது ஹீட்சில் கொல்லம் ஜீஸஸ் கிளப்பின் ஆனாரி படகு முதலிடத்தில் வந்தது. இரண்டாம் ஹீட்சில் புன்னமடை கிளப்பின் சம்பக்குளம் படகு முதலிடத்தையும், மூன்றாவது ஹீட்சில் தலவடி சுண்டன் படகும் முதலிடத்தில் வந்தன. படகுகள் துடுப்புகளால் துழாவப்பட்டு பாம்புகளை போல சீறி வந்த காட்சியை கேலரியில் இருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.படகு போட்டியின் இறுதிப் போட்டிக்கு அவை குறிப்பிட்ட தூரத்தை கடந்த நேரத்தின் அடிப்படையில் நான்கு படகுகள் தகுதி பெற்றன. பள்ளாதுருத்தி கிளப்பின் காரிச்சால் படகு நான்கு நிமிடங்கள் 14 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பெற்றது. வில்லேஜ் கிளப்பின் வியபூரம், நிரணம் கிளப்பின் நிரணம் சுண்டன், குமரகம் கிளக்கின் நடுபாகம் ஆகிய நான்கு படகுகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதைத் தொடர்ந்து இந்த நான்கு படகுகளும் இறுதிப் போட்டியில் மோதின.இறுதிப் போட்டியில் மைக்ரோ செகன்ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காரிச்சல் சுண்டன் நேரு கோப்பையை வென்றது. நேரு டிராபியை காரிச்சல் சுண்டன் வெல்வது இது ஐந்தாம் தடவையாகும். நேரு கோப்பை படகு போட்டியை முன்னிட்டு ஆலப்புழை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.