தீபாவளியன்று மற்றவர்களுக்குதான் பட்டாசும், பாதுஷாவும்.. எங்களின் ஒரே சாய்ஸ் மதுபானங்கள்தான்.. அதில் எங்களால் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே முடியாது என போட்டிபோட்டு வாங்கி கைகளில் பாட்டிலோடு வரும் இந்த மதுப்பிரியர்களால் மதுபானக்கடைகள் கூட்டத்தால் தத்தளித்தன.எப்பொழுதும் பிசியாக இருக்கும் கடை என்றால் அது டாஸ்மாக் கடைதான். வேலைவெட்டிக்கு செல்லாவிட்டாலும் உங்களுக்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? என பார்ப்போர் புலம்பும் அளவுக்கு மதுபானக்கடைகளில் ஆண்கள் கூட்டம் நிரம்பி வழியும். சாதாரண நாட்களிலேயே மது விற்பனை சக்கைபோடுபோடும்.. அப்படி இருக்கும்போது தீபாவளி பண்டிகையில் சொல்லவா வேண்டும்? மதுப்பிரியர்களுக்கு டபுள் மடங்கு போதையென்றால் டாஸ்மாக்குகளில் TRIPLE மடங்கு விற்பனைதான். அந்த வகையில் திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பழைய தஞ்சை சாலையில் உள்ள மனமகிழ் மன்றம் என்ற மதுபானக்கூடம் 12 மணிக்கு முன்பாகவே திறக்கப்பட்டது.கடையை எப்போது திறப்பார்கள் என காத்திருந்த மதுப்பிரியர்கள் முண்டியடித்து எனக்கு.. உனக்கு.. என 2 கைகளிலும் மதுபாட்டில்களை இறுகப்பற்றி முகம் மலர்ந்தனர்.எங்களுக்கு இதுதான் தீபாவளி என அவர்கள் வார்த்தைகளால் சொல்ல தேவையில்லை.. அவர்களின் முகத்தில் இருந்த புன்னகையே சொன்னது.இதேபோல் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்ததும் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை ஆர்வமாக வாங்கி சென்றனர். விட்டால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போய்விடும் அளவுக்கு ஆர்வம் அளவில்லாமல் சென்ற காட்சிகளையும் காண முடிந்தது.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தீபாவளியன்று மீண்டும் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள், மடை திறந்து தாவும் நதியலை நான் என்பதுபோல் மதுபாட்டில்களை வாங்க குவிந்தனர். புதிய பேருந்து நிலையம், மையவாடி சந்திப்பு, 2 ஆம் ரெயில்வே கேட் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் தலைகளாக காட்சியளித்தது.இதேபோல் மதுரையிலும் மதுபானக்கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தீபாவளியன்று மீண்டும் திறக்கப்பட்டதும் விடுபட்ட 3 நாட்களுக்கும் சேர்த்து குடிமகன்கள் மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர். அரசு மதுபானக்கடைகள் 12 மணிக்கு திறக்கும்வரை பொறுமை காக்க முடியாத குடிமகன்கள், 11 மணிக்கு திறக்கப்பட்ட மனமகிழ் மன்றங்களில் குவிந்து மதுபாட்டில்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர்.