பணம் இல்லாத ஒரே காரணத்துக்காக ஐஐடியில் சீட் மறுக்கப்பட்ட தலித் மாணவருக்கு உச்சநீதிமன்றம் உரிய நீதியை வழங்கியிருப்பது சாமானியர்களுக்கு நம்பிக்கையளிப்பதாய் உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவன் அதுல் குமாா். ஐஐடியில் படித்து ஒரு சிறந்த பொறியாளராக வர வேண்டும் என்ற கனவை நெஞ்சம் நிறைய சுமந்து வந்த மாணவன், மிகவும் கடினம், சிபிஎஸ்இ மாணவர்களுக்கே தள்ளாட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஜேஇஇ தோ்வையும் தனது கடின உழைப்பால் இரண்டாம் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார்.ஜேஇஇ தேர்வை சந்திக்க நாடு முழுவதும் மாணவர்கள் பல லட்சங்களை செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களை நாடி வரும் சூழலில் தந்தையும் தாயும் தனக்கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானம் 3 வேலை உணவுக்கே போதாது என்ற நிலையில் ஜேஇஇ தோ்வில் தேர்ச்சி பெற மாணவன் அதுல் குமாா் எந்த அளவுக்கு உழைத்திருக்க வேண்டும் என்பதை சொல்லி புரியவைப்பதற்கு இல்லை.ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் ஐஐடி-யில் பி.டெக் படிக்க மாணவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. சேர்க்கை தொகையாக 17 ஆயிரத்து 500 ரூபாயை 4 நாட்கள் அவகாசத்திற்குள்ளாக செலுத்தி சேர்க்கையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு மாணவருக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் மாணவன் அதுல் குமாரின் கனவுக்கு பெற்றோரின் வறுமை தடையாக நிற்க அப்போதைக்கு வென்றது என்னவோ வறுமை தான்.எவ்வளவோ முயற்சி செய்தும் குறித்த நேரத்துக்குள் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனதால் மாணவருக்கு தன்பாத் ஐஐடி-யில் இடம் மறுக்கப்பட்டதை தொடர்ந்து வேதனையில் திளைத்த மாணவனின் நிலையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த அதுல் குமார் போராடிப் பார்ப்பது என முடிவெடுத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்ட உதவி ஆணையத்தை நாடியிருக்கிறார். ஐஐடி ஒருங்கிணைந்த சேர்க்கையை நடப்பாண்டு சென்னை ஐஐடி நடத்தியதால், இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு சட்ட உதவி ஆணையம், அந்த மாணவருக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படியே மாணவன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராத மாணவன் நீதி கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் முதல் வெற்றியாக மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவருக்கு தன்பாத் ஐஐடி-யில் ஒதுக்கப்பட்ட அதே இடத்தை அதே batch-ல் மீண்டும் வழங்குமாறு தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த திறமையான மாணவனை பணமில்லை என்ற ஒரே காரணத்திற்காக விட்டுவிட முடியாது என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தனது கனவுக்காக மாணவர் அலைக்கழிக்கப்பட்டது குறித்தும் வேதனை பகிர்ந்தார். இதையடுத்து "All the best. Do well," என மாணவனை பாராட்டி வழியனுப்பி இருக்கிறது உச்சநீதிமன்றம்.இதனிடையே தடம் புரண்ட தனது வாழ்க்கையை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பூரிப்பில் நெகிழ்ந்து பேசினார் மாணவர் அதுல் குமார். தகுதியும் திறமையும் இருந்தும் கல்விக்கான கட்டணத்தை செலுத்த வழியின்றி எத்தனையோ மாணவர்கள் கனவு மண்ணாய் போன நிலையில் அவர்களுக்கான திறவு கோளாகவே அமைந்திருக்கிறது மாணவர் அதுல்குமார் பெற்றுத்தந்துள்ள தீர்ப்பு.