தருமபுரி அடுத்த வத்தல்மலை மீது சின்னங்காடு, ஒன்றியங்காடு, பால்சிலம்பு, பெரியூர், குழியனூர், நாயக்கனூர், கொட்டாங்காடு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இந்த மலை கிராமங்களில் ஆண்டு முழுவதும் குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் மினி ஊட்டி என அழைக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். தங்கள் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என மலைகிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு 1 மருத்துவர், 4 செவிலியர்கள் மற்றும் 1 உதவியாளர் என சுழற்சி முறையில் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக 25 கி.மீ. தூரத்தில் உள்ள தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் தருமபுரியில் இருந்து வந்துதான் நோயாளிகளை அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறும் மலைகிராம மக்கள், ஆம்புலன்ஸ் வருவதற்குள் உயிரிழப்பு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.