கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ். எம்.டெக். படித்துள்ள 40 வயதான இவரது மூத்த மகள் கீதா மற்றும் பி.டெக். படித்துள்ள 37 வயதான இளைய மகள் லதா ஆகிய இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஈஷா யோகா மைய பயிற்சி வகுப்புக்கு சென்றதாகவும் 13 ஆண்டுகளாகியும் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை என தெரிகிறது. கடந்த 11 ஆண்டுகளில் 8 முறைதான் பார்த்திருப்பதாக கூறி இருந்த காமராஜ் ஈஷா யோகா மையத்தை விட்டு வராமல் அடம் பண்ண என்ன காரணம் என மகள்களிடம் கேட்டாலும் வெறும் நமஸ்காரத்தையும் அழுகையையும் மட்டுமே பதிலாக கொடுப்பதாக கூறி இருந்தார். தலை நிறைய முடியுடன் இருந்த தனது 2 மகள்களுக்கும் மொட்டையடித்து மூளைச்சலவை செய்ததோடு SILENCE HOUR என்ற பெயரில் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக ஈஷா யோகா மையம் மீது காமராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். கூடவே கடந்த ஆண்டு ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே வந்த சுபஸ்ரீ என்ற பெண்கூட இருட்டு அறையில் சித்ரவதை செய்யப்பட்டதால்தான் உயிரிழந்தார் என்று தனது மகள்கள் கூறியதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தனது மகள்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காமராஜ். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான மகள்கள், தனது பெற்றோர் தங்களை அவமானப்படுத்துவதாக வாக்குமூலம் அளித்தனர். அப்போது நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள்தானே அப்படியானால் அவமானத்தை பொருட்படுத்துவது ஏன்? எனவும் ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும், நாங்கள் யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை எனக்கூறிய நீதிபதி ஆனாலும் பல சந்தேகங்கள் உள்ளதாக ஐயப்பாடு தெரிவித்தனர்.தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஆய்வு செய்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, ஈஷா யோகா மையத்திற்குள் நண்பகல் 12 மணியளவில் அதிரடியாக கார்களில் உள்ளே நுழைந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரவு 10 மணிவரை ஆய்வு செய்தனர். முதல்நாளில் 9 மணிநேரத்திற்கு மேலாக ஆய்வு நடந்த நிலையில் இரண்டாவது நாளாக ஈஷா யோகா மையத்தில் விசாரணை விறுவிறுப்பாக நடந்தது.. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே காமராஜின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.