வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தடுத்த மனைவி மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களையும் காவலர் தனது குடும்பத்தினருடன் இணைந்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் காவலர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தை சேர்ந்த ஜினோஸ்லின் என்ற பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த காவலரான ஜாக்சன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இடையில் கசந்த உறவால் காவலர் ஜாக்சன் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜினோஸ்லின் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிந்து காவலர் ஜாக்சன் கைது செய்யப்பட்டதுடன் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாக்சன், ஜினோஸ்லினை திருமணம் செய்து கொண்ட நிலையில், காவல்நிலையத்தில் இருந்த வழக்கையும் ஜினோஸ்லின் வாபஸ் பெற்றிருக்கிறார். இதனால் மீண்டும் பணியில் சேர்ந்த காவலர் ஜாக்சன், மனைவியுடன் நான்கு மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், தாயார் வீட்டில் வசித்து வந்த மனைவியிடம் திருமண பந்ததை முடித்து கொள்ளும் வகையில் விவாகரத்து மனு ஒன்றையும் அளித்துள்ளார். அத்துடன் வீட்டருகே வசிக்கும் வேறொரு பெண்ணுடன் பேசி பழகி வந்ததாக தெரிகிறது.இந்நிலையில், ஜாக்சனும், தாமும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக, ஜாக்சனுடன் தொடர்பில் இருந்த பெண்ணிடம் ஜினோஸ்லின் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜாக்சன், அவரது தாயார் மற்றும் சகோதர்களுடன் ஜினோஸ்லின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரரையும் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.