(( ஆதவ் அர்ஜூனா ))என்ன தான் சந்திப்பு...சமரசம்...சமாதானம் என சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், திமுக-விசிக கூட்டணியில் கிளம்பிய புகைச்சல் முழுமையாக அணையவில்லை என்றே அரசியல் களத்தில் இருந்து கிடைக்கும் தகவலாக இருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தான், முதலில் திமுக-விசிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்வியை எழ வைத்தது. அந்த கேள்விக்கு விடை கிடைக்கும் முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பற்ற வைத்த வெடி, பட்டாசாக வெடித்து சிதறியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே வெடித்த தடமே தெரியாத அளவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் தனது படையுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்தோடு, திமுக-விசிக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என விளக்கமும் கொடுத்திருந்தார் திருமாவளவன்.(( திருமாவளவன், விசிக தலைவர் ))இந்த நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மூலம் மீண்டும் திமுக-விசிக கூட்டணிக்குள் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் அதிகாரத்திற்கு வரக்கூடாதா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டதோடு, வட மாவட்டங்களில் திமுகவின் வெற்றிக்கு விசிக தான் காரணம் என்றெல்லாம் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சு மீண்டும் கூட்டணியில் பிளவா? என்ற கேள்வியை ஆழமாக எழ வைத்துள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுக தலைமையை டென்ஷனாக்கிய நிலையில், ஆ.ராசாவை வைத்து பதிலும் அளித்துள்ளது திமுக...ஆதவ் அர்ஜூனா கொள்கை புரிதலின்றி பேசுவதாக குறிப்பிட்ட ஆ.ராசா, ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். (( ஆ.ராசா, திமுக எம்.பி.))ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவில் ஏற்படுத்திய மனக்கசப்பு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விசிகவுக்குள்ளேயே கலகத்தை மூட்டியிருக்கிறது. குறிப்பாக, கூட்டணி உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு ஆதவ் அர்ஜூனா முன்வைத்த விமர்சனத்திற்கு விசிகவிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு விசிகவின் பொதுச் செயலாளரான எம்.பி. ரவிக்குமாரே கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். மேலும், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசுவும், துணை முதல்வர் குறித்த ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்தில் எந்த உடன்பாடும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜூனாவின் கருத்து அவருடைய சொந்த கருத்தே தவிர, கட்சியின் கருத்து அல்ல எனவும் கூறிய வன்னியரசு, திமுகவுடன் கூட்டணி சுமூகமாக இருப்பதாக கூறியதோடு, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.(( வன்னியரசு, விசிக துணை பொதுச் செயலாளர் ))திமுக கூட்டணியில் புகைச்சல் என எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பா.ஜ.க.வும் மாறி மாறி கூறி வரும் நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு எதிர்க்கட்சிகளின் யூகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இன்னும் முக்கியமாக ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு இன்னும் திருமாவளவன் வாயே திறக்காதது திமுகவை டென்ஷன் ஆக்கி, விசிகவிலும் அதிருப்தி குரல் எழ வைத்துள்ளது. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொந்த கட்சியினர் சிலர் வலியுறுத்தியும் கூட திருமாவளவன் மௌனம் காத்து வருவது, திருமாவளவனின் குரலாக தான் ஆதவ் அர்ஜூனா பேசுகிறாரா? என்றகேள்வியையும் எழுப்பியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் விசிகவுக்கு, வருகிற சட்டமன்றதேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தற்போதே திமுக தொடங்கிவிட்ட நிலையில், கடந்த முறை போல இல்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டு பெற உறுதியாக இருக்கும் திருமாவளவன், அந்த கணக்கில் தான் மது ஒழிப்பு மாநாடு என்ற அஸ்திரத்தையே கையிலெடுத்ததாக சொல்கிறார்கள். மது ஒழிப்பு மாநாடு தொடங்கி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கேட்டது வரை அனைத்துமே தேர்தல் கணக்கு தான் எனவும்ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் என கட்சியில் முக்கியநிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், திருமாவளவன் இன்னும்மௌனமாகவே இருந்து வருகிறார்.கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துவதா? என்ற கேள்விக்கு, மக்களின் நலனுக்காக என்று பதிலளித்த திருமாவளவன், தற்போது ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்த விவாதத்தை, வழக்கம் போல் சுமூக முடிவுக்கு கொண்டு வருவாரா? அல்லது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமா? என்பது போக போக தான் தெரியும்...!