தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பிய பயணிகளால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சிலர் படிக்கட்டுக்களில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.அதேபோல் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. பல்வேறு ஊர்களுக்கு திரும்புவதற்கு டிக்கெட் கவுண்டரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்காக கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு அவர்கள் ஏறினர்.சென்னை, பெங்களூரு, ஒசூர் பகுதிகளுக்கு செல்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனர். அங்கு போதிய இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் நடைபாதைகளில் அமர்ந்து பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.விழுப்புரம் புறவழிச் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்பட்டன. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.சொந்த ஊர் செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் வரும் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறும் "சாத்" பண்டிகைக்காக பயணமாகினர்.