சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஏர்ஷோ நிகழ்ச்சியை காண தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் இரண்டரை வயது மகனுடன் சென்றிருந்த திருவொற்றியூர் கார்த்திகேயன் தீவுத்திடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எடுப்பதற்காக சென்றார். நான் வரும்வரை இந்த இடத்திலேயே நிற்க வேண்டும் என மனைவி மகனை கடற்கரையில் நிற்க வைத்துவிட்ட சென்ற கார்த்திகேயனுக்கு தான் திரும்ப வரவே முடியாது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து காத்திருந்து சோர்வடைந்த சிவரஞ்சனி தனது கணவரின் செல்போனுக்கு எண்ண முடியாத அளவுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனார். இந்நிலையில் சிவரஞ்சனியின் அழைப்பை எடுத்த ஒருவர் உங்கள் கணவர் வாந்தி எடுத்து மயங்கி கிடப்பதாக கூற, மகனை தூக்கிகொண்டு தங்களது பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை வந்தடைந்தார். ஆனால் கணவரோ கண்திறக்காமல் அப்படியே கிடக்க பதறிய சிவரஞ்சனி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் தமது கணவரை காப்பாற்ற முடியவில்லை என கதறினார்.2 மணிநேரமாக என் கணவருக்கு எந்த முதலுதவி சிகிச்சையும் யாரும் செய்யவில்லை, ஆம்புலன்ஸ் வசதிகூட இல்லையென என கண்ணீர் சிந்திய சிவரஞ்சனி, லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடுவார்கள் என்று தெரிந்திருந்தும் எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.சிவரஞ்சனியின் கதறல் ஒருபுறம் இருக்க, தமது ஒரே மகனை இழந்துவிட்டதாக கார்த்திகேயனின் தாய், நெஞ்சம் வெடிக்க துடித்தார். தமது கணவரை கொரோனா காவு வாங்கியதாகவும், தற்போது தமது ஒரே மகனும் இல்லாமல் இனி நான் எப்படி வாழ்வது? எனவும் மனம் உடைந்து அழுதார்.இதேபோல் கார்த்திகேயனின் சகோதரி ரம்யா, தனது சகோதரனுக்கு திருமணமாகி நான்கே ஆண்டுகள்தான் ஆகிறது என்றும் 34 வயது சாக வேண்டிய வயதா? என்றும் கண்கலங்கினார்.இதனிடையே கார்த்திகேயன் எவ்வாறு இறந்தார் என்பதற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறாததால், உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.