திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் ரயில் நிலையத்தில் பயங்கர சத்தம், ரயிலில் சிக்கி தவித்த பயணிகளில் கதறல்.... என்ன நடந்தது ?திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நடத்த விபத்து தான் அது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூர் வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா என்ற பகுதிக்கு செல்லக்கூடிய பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில், அங்கு இரண்டு நாட்களாக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது இரவு சுமார் 8.30 மணி அளவில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில், சரக்கு ரயிலின் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரு ஏசி பெட்டிகள் உள்ளிட்ட ஆறு பெட்டிகள் பயணிகளுடன் ஒன்றன் மீது ஒன்று ஏறியும், நான்காபுறமும் சிதறியபடி கவிழ்ந்த நிலையில் கிடந்தன. இதில், இரு ஏசி பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.ரயில் பெட்டிக்குள் இருந்த குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் கத்தி கதறியபடி வெளியில் வர முடியாமல் தவித்ததால், பயணிகளின் சத்தம் மரண ஓலமாக கேட்டது. இதனை அறிந்த, கவரப்பேட்டை மக்கள் உடனடியாக ஓடி வந்து பெட்டிக்குள் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில பயணிகள் சிதறி கிடந்த ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு உடனடியாக வெளியேறினர். மற்ற பெட்டிகளில் பயணித்த பயணிகள் அலறியடித்தபடி ரயில் இருந்து வெளியேறி ஓடினர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், பயணிகளை பத்திரமாக மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி, சிப்காட், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீப்பிடித்து எரிந்த ஏசி பெட்டிகளின் தீயை அணைத்தனர். இதனைதொடர்ந்து, பெட்டிக்குள் யாராவது சிக்கியுள்ளார்களா? என்று தீவிரமாக தேடினர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு செல்வதற்காக 20க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் உள்ளிட்ட 19 பேரை பொன்னேரி அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடத்த இடத்தினை ஆய்வு செய்து மீட்பு பணியினை துரிதப்படுத்தினர். இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை என்றும், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து பயணிகளை பத்திரமாக மீட்டதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார். ரயில் விபத்து தொடர்பாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசரிடம் செல்போன் வாயிலாக கேட்டறிந்தார்.இதனிடையே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதனையடுத்து ரயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மிக், MISHI ஆகிய இரு மோப்பநாய்களை கொண்டு ரயிலில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என்று ஒவ்வொரு பெட்டியாக சென்று தீவிரமாக சோதனை செய்தனர்.15 அல்லது 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் என தெரிவித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் R.N.சிங், பாகுமதி ரயில் பயணிகள் அவர்களது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.விபத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலை மீட்கும் பணி மற்றும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், தமிழக அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.இதனிடையே, விபத்தின் காரணமாக, ரயில் சேவைபாதிக்கப்பட்டு. 12 ஆம் தேதி சென்னை விஜயவாடா செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தடை பட்டுள்ளது. மேலும், தன்பாத்- ஆலப்புழா ரயில் காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. ஜபல்பூர் - மதுரை அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.