திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தன்னை பாஜகவின் பிரமுகர் என முன்னிலைப்படுத்திக் கொண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. கருமாரம்பாளையம் பாஜக கிளை அலுவலகத்தில் வைத்தே கடந்த 4 ஆண்டுகளாக செந்தில்குமார் ஏலச்சீட்டு நடத்தி வர கட்சியின் மீது நம்பிக்கை வைத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை கட்டியுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் முதிர்ச்சியடைந்த சீட்டு பணத்தை வாங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.20ம் தேதி பணத்தை திருப்பி அளிப்பதாக வாக்களித்திருந்த செந்தில்குமாரின் செல்போன் 17ம் தேதி இரவே ஸ்விட்ச் ஆப் MODE-க்கு சென்றதால் சந்தேகம் அடைந்த மக்கள் விடிந்த உடனேயே பாஜக கிளை அலுவலகத்தில் கூடிய நிலையில் அப்படியொரு அலுவலகம் செயல்பட்டு வந்ததற்கான தடமே இல்லாத அளவுக்கு போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.வயிற்றை கட்டி வாயை கட்டி 100க்கும் மேற்பட்டவர்கள் சிறுக சிறுக சேர்ந்த பணம் ரூ.3 கோடியை அபேஸ் செய்து கொண்டு பாஜக பிரமுகர் செந்தில்குமார் கூண்டோடு தலைமறைவான விவரம் தெரியவந்ததை தொடர்ந்து பணத்தை இழந்து நடுரோட்டில் நிற்கதியாய் நின்ற பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். செந்தில்குமார் மீதிருந்த நம்பிக்கையை காட்டிலும் பாஜக மீதிருந்த நம்பிக்கையால் மட்டுமே பணத்தை கட்டியதாகவும் இப்படி ஏமாற்றுவார்கள் என் நினைத்துக்கூட பார்க்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகாரை முன்வைக்கும் நிலையில் செந்தில்குமாருக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும்அவர் நடத்தி வந்தது பாஜக கிளை அலுவலகமே அல்ல எனவும் திருப்பூர் பாஜக மாவட்ட நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. பாஜக கிளை அலுவலகம் என்ற பேரில் செந்தில்குமார் நடத்திவந்த அலுவலகத்தில் பாஜகவின் தேசிய தலைமை முதல் தமிழக தலைமை வரை படங்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு, சதா கட்சி கரை வேட்டிகளின் நடமாட்டம் என கட்சி ஆபீஸ் போலவே எப்போதும் பரபரப்பாகவே காட்சியளித்திருந்த நிலையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை உள்பட பாஜகவின் பல நிகழ்ச்சி பேனர்களில் செந்தில்குமாரின் படம் இடம் பெற்றிருப்பது எதன் அடிப்படையில் என்ற கேள்வியை எழுப்புகிறது.ஆனால் தற்போது செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் வியரவை சிந்தி உழைத்து சேமிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.