சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய 27 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரகாஷ், கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள 80 ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 சம்பளம் வழங்கப்படும் நிலையில் ரூபாய் 702 ஊதியமாக வழங்கப்படுவதாக கணக்கில் காட்டப்படுவதாகவும், அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது சுர்ரென கொந்தளித்த 13 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சித்திக், உனக்கு தேவையில்லாததையெல்லாம் கூட்டத்தில் கேட்காதே, வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டோம் என பிரகாஷை ஒருமையில் பேசினார்.இதையடுத்து பிரகாசும் சித்திக்கும் மாறிமாறி ஒருமையில் வார்த்தைப்போர் செய்ய, அடிப்பதுபோல் எகிறிய சித்திக்கின் கையில் இருந்த மைக்கின் முன்பகுதி தனியாக வந்து விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் இருவரும் வாடா போடா என சண்டையை ஜவ்வாக இழுக்க, இடையிடையே ஆபாச வார்த்தைகளும் குறைவில்லாமல் இனாமாக பறந்தது.பொறுத்து பொறுத்து பார்த்த மேயர் முத்து துரை, அதிமுக கவுன்சிலர் பிரகாஷை நோக்கி வெளியே போயா என ஒருமையில் பாய்ந்ததோடு சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என பகீர் மிரட்டலும் விடுத்தார். இதனால் மேயர் மற்றும் சித்திக்கிற்கு எதிராக பிரகாஷ் கோஷம் எழுப்ப, யோவ் நீ கிழிச்சதெல்லாம் தெரியும் போயா என மேயர் முத்து துரை கூட்டத்தை மேலும் பரபரப்பாக்கினார். இதனிடையே பெண் கவுன்சிலர் ஒருவர் வாயை திறந்து ஏதோ சொல்ல வந்த நிலையில் என்ன நீயும் போகணுமா? வெளியே போ என அந்த பெண் கவுன்சிலரையும் பேசவிடாமல் வாயை அடைத்தார். இதையெல்லாம்விட ஐந்தே ஐந்து செய்தியாளர்கள் மட்டும்தான் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், மற்ற செய்தியாளர்கள் இடத்தை காலிசெய்யலாம் புது ரூல்ஸ்போட்டார் மேயர். குறிப்பிட்ட அந்த 5 செய்தியாளர்கள் மட்டும்தான் தங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடுவார்கள் என மேயர் சொல்லாமல் சொல்லிய நிலையில் எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம் வெளியில் செல்ல வேண்டும் என யாரும் நிர்பந்திக்க முடியாது என செய்தியாளர்கள் பாயிண்டாக அடித்தனர்.உள்ளதை உள்ளபடி சொல்லும் செய்தியாளர்கள் தங்களுக்கு செட் ஆகாது என்பதுபோல் மேயர் பேசியது ஒட்டுமொத்த ஊடகத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்கூட்டத்தையே முத்து துரை முகம் சுளிக்க வைத்துள்ளது நல்ல அணுகுமுறையா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.