Also Watch
Read this
தவெகவை அச்சுறுத்தும் முதலாளிகள்.. காசும் கொடுக்கல, கையும் கொடுக்கல
அச்சுறுத்தும் முதலாளிகள்
Updated: Oct 01, 2024 12:04 PM
தமிழக வெற்றி கழக மாநாடு இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வரும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதலாளி கதையை திரும்ப திரும்ப பேசி வருகிறார். அதாவது, தன்னை சந்திக்கும் பலர், மாநாட்டுக்கு ஓனரிடம் லீவு கேட்டேன், அவர் தரமுடியாது என்றவுடன் வேலையவே விட்டுவிட்டேன் என்றும், போனசும் தரமாட்டேன் என்றார்கள் பரவாயில்லை என சொல்லிவிட்டேன் என்றும் கூறி தம்பட்டம் அடித்து வந்தார்.
அவர் பேச்சு என்னவோ கேட்க கூஸ்பம்ப்ஸ் ஏற்றுவதை போல் இருந்தாலும், ரியாலிட்டி என்பது முற்றிலும் வேறாக உள்ளது. தவெகவில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இன்னும் சிலர் தினக்கூலியை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் கட்சியின் முதல் மாநாட்டுக்கு மாவட்டத்தையே திரட்டி வரவேண்டுமென்றால் லட்சக்கணக்கில் செலவாகுமே என நிர்வாகிகள் பீதியில் உறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கு உதாரணமாக திருவான்மியூர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் ஒருவர், திடீரென ஆலோசனை கூட்டம் என்றதும் செலவுக்கு என்ன செய்வது ஏது செய்வது என திகைத்து நின்றதாகவும், அப்போது தான் ஒரு நண்பர் சாப்பாட்டு செலவை ஏற்பதாக தெரிவித்து வயிற்றில் பால் வார்த்ததாகவும் கூறினார். இது தான் தவெகவினரின் உண்மையான நிலை.
இந்நிலையில், மாநாட்டுக்காக கட்சித்தலைமை பணம் தரும் என காத்திருந்து தலைமை அலுவலகத்துக்கு சென்ற நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றமே கிட்டியது. முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த், கடைசி வரை கஜானாவை பற்றி வாய்த்திறக்காத நிலையில், கடைசியில் கைகொடுத்து அனுப்பி கைவிரித்தது தான் மிச்சம் என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
கட்சி தான் கைவிட்டது என்றாலும் தீபாவளி போனஸ் இருக்கிறதே என எண்ணி,பிள்ளைகளுக்கு துணிமணி எடுப்பதை கூட தவிர்த்துவிட்டு மாநாட்டுக்கு பணம் சேர்த்துவைக்க நிர்வாகிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைத்தாற்போல் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசி வருவதாக நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.
குடும்பம், வேலை தான் முக்கியம் என கட்சித்தலைவர் விஜய் ஒருபுறம் அறிவுறுத்திய நிலையில், வேலையை விட்டாவது மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று ஒரு தொண்டன் சொல்லியதை பெருமையாக பேசி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்... இவர் பேசியதிலிருந்து தவெகவினர் வேலை செய்யும் இடங்களில் முதலாளிகளும் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
செலவுக்கு பணம் தான் தரவில்லை என்றாலும், கட்சி மாநாட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையிலுமா உலை வைப்பது ன கடுப்பாகி வருகின்றனர் தவெக நிர்வாகிகள். தற்போதும் கூட மாநாடு செலவுக்கு பணம் கொடுக்க நிறைய பேர் தயாராக இருப்பதாகவும், கைமாறுக்கு அவர்கள் விஜய்யுடன் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் நிர்வாகிகள் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை எப்படி தலைவரிடம் கேட்பது என நிர்வாகிகள் தவிக்கின்றனர். இப்படி கட்சியின் அடித்தளமே தள்ளாடும் நிலையில், த.வெ.கவின் தலையெழுத்து என்னவாகும் என்பது மாநாட்டின் முடிவில் தான் தெரியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்... நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சிவப்பிரகாஷ்.
காட்டு தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசம்.. விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved