தனிப்பட்ட காதல் விவகாரத்திற்கு, பள்ளிக்குள் புகுந்து மாணவ, மாணவர்கள் முன்பாக ஆசிரியை பழி தீர்க்கப்பட்டது பட்டுக்கோட்டையை பதற வைத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சின்னமனை கிராமத்தை சேர்ந்த 26 வயதான ரமணி என்ற பெண், தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் புதன்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியை ரமணி, காலையில் வகுப்பை முடித்துவிட்டு, ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் இருந்திருக்கிறார். அப்போது, கையில் கத்தியுடன் பள்ளிக்குள் புகுந்த நபர் ஒருவர், ஆசிரியை ரமணியை கழுத்திலேயே குத்த, ரத்தம் பீறிட்டிருக்கிறது.ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை ரமணியை, வேறு வழியின்றி மாணவர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், கழுத்திலேயே குத்தியதில் அதிகளவு ரத்தம் வெளியேறி செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார்.இந்த நிலையில், கொலை நிகழ்ந்து அரை மணி நேரத்திலேயே ஆசிரியையை கொலை செய்த கொலையாளி மதன் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் விவகாரத்தில் பள்ளிக்குள் புகுந்து கொலை செய்தது தெரியவந்து . அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக இருந்த ரமணியும், அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும் ரமணி வீட்டில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர் நேரில் சென்று பெண் கேட்ட போது, ரமணி குடும்பத்தினர் தர மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. பெற்றோர் சம்மதிக்காத நிலையில், காதலை கைவிட ரமணி முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. மதன்குமாருடனான பேச்சு வார்த்தையை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்ட ரமணி, மதன்குமாரே வழிய வந்து பேசினாலும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. காதலை கைவிட்டது ஒரு பக்கம் இருக்க தேடி வந்து பேசினாலும் ரமணி விலகி, விலகி சென்றது மதன்குமாருக்கு ஆத்திரத்தை கொடுத்திருக்கிறது.இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், ரமணி ஆசிரியையாக இருந்து வர, மதன்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த போதுதான் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் கேட்டுச் செல்லவே, ரமணி வீட்டில் தரமுடியாது எனக் கூறியதால், பள்ளிக்குள்ளேயே கத்தியோடு புகுந்து கொடூரமாக கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கை கொண்ட மதன்குமார், எந்த கேள்வி, கேட்பாறும் இல்லாமல் நேரடியாக உள்ளே புகுந்து ஆசிரியர்களுக்கான ஓய்வறைக்கு சென்று ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.தனிப்பட்ட விஷயத்திற்காக அரசுப் பள்ளிக்குள்ளேயே புகுந்து கொலை செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவருகிறது எனவும், சட்டம் ஒழுங்கை காக்க தவறியதாகவும் குற்றம்சாட்டினார். விமர்சனத்திற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனிப்பட்டகாரணங்கள் என்றாலும் மாணவர்கள் முன்பு கொலை நிகழ்ந்த சம்பவம் விரும்பத்தகாதது என்றதோடு, இனிமேல் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதோடு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.பள்ளிக்குள் ஆயுதத்துடன் புகுந்து மாணவ, மாணவர்கள் மத்தியில் கொலை செய்யும் அளவுக்கு துணிந்தது ஆசிரியர்கள், பெற்றோரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.