2003 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 21 ஆண்டுகள் கழித்து விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை கடந்த 1ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் போர் விமானங்கள் வானை கிழித்துக்கொண்டு சீறிப்பாயும் சத்தம் சென்னைவாசிகளின் காதுகளை செவிடாக்கி வருகிறது. இதில் எதிரி நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் இந்திய விமானப்படையின் சுகோய் எஸ்யு-30, MI 17 V ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ALH), மல்டிரோல் காம்பாட் ஏர்கிராஃப்ட்,ரஃபேல் ஏர்கிராப்ட், தேஜஸ் போர் விமானங்கள், MIRAGE, P8I போன்ற விமானங்கள் வானில் ஆடிய சாகசங்கள் மக்களை குஷிப்படுத்தி வருகிறது. வானில் திமிறிக்கொண்டு பறந்த MIRAGE 2000 போர் விமானத்துக்கு நடுவானிலேயே AERIAL REFUEL TANKER-ஆன IL -78 அலுங்காமல் குலுங்காமல் எரிபொருளை நிரப்பிய காட்சி அப்பப்பா அட்டகாசம்.மல்டிமிஷன் கடல் ரோந்து விமானமான P8i முன்னால் செல்ல இரண்டு ரஃபேல் விமானங்கள் வானில் பறந்து சென்ற காட்சியை பார்க்கும் போது அர்ஜுனன் ஏந்தி நின்ற வில்லை போலவே இருந்தது. தரை வழியாக வரும் எதிரிகளை வானில் பறந்தவாறே துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஜாக்குவார் போர் விமானங்கள் எரிபொருளை புகையாக்கி கக்கிக்கொண்டே வானில் சீறிப்பாய்ந்தது பறந்தது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது. அடுத்து வானை கிழித்துக்கொண்டு வந்தது இலகுரக போர் விமானங்கள்...கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர்கள் அதுபோல பார்ப்பதற்கு அளவு சிறியதாக இருக்கும் இந்த விமானங்கள் எதிரியின் கண்களுக்கு டிமிக்கி கொடுத்து தாக்குவதில் கைதேர்ந்தவை.WEATHER என்ன தான் TOUGH-ஆக இருந்தாலும் எதிரிகளின் இலக்கை தாக்கி அழிப்பதில் இவனை மிஞ்ச ஆளே இல்லை என்ற பெருமைக்கு உரிய சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தின் காட்சிகள் தான் இவை. அடுத்து மூன்று, மூன்றாக படையெடுத்து வந்த போர் விமானங்கள் வானில் வண வேடிக்கை காட்டியதோடு, பாணா காற்றாடி போல் சுழன்று சென்றது பார்போரை அசரடித்தது. அதிலும் இந்த விமானம் நடுவானில் சோமர் சால்ட், அடித்த காட்சி அடிபொளி ரகம்.அப்போது இது என்ன பிரமாதம் என வந்த சுகோய் 30 போர் விமானம் வானில் 5 முறை சுழன்று சுழன்றுசோமர் சால்ட் அடித்ததோடு, இறுதியாக பூங்கொத்து போன்ற ஓவியத்தை வரைந்து சென்றது தாறுமாறாக இருந்தது. தொடர்ந்து கபாலியின் BACKGROUND BGM-ஓட, தேஜஸ் விமானம் நடுவானில் செய்த அட்டகாசத்தை பார்க்க முடியாமல் தலையே சுற்றியது. கிழித்த கேட்டை நானும் தாண்ட மாட்டேன் நீயும் தாண்ட கூடாது என்ற போக்கில் போர் விமானங்களுக்கு ஈடாய் போர் ஹெலிகாப்டர்கள்பிசிறே தட்டாமல் நேர் கோட்டில் செய்த சாகச காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்தது. இந்த ஒத்திகையை ஏராளமான மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பொறுமையாக கண்டு களித்த நிலையில் இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து வியந்த போர் விமானங்களை முதன்முறையாக நேரில் பார்த்த அனுபவத்தை பூர்த்தி வெளிப்படுத்தினார் இந்த பெண் பார்வையாளர்.