சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு, சாலிகிராமம் எம்.ஜி.ஆர். தெருவில் 65 லட்சம் ரூபாய் கொடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர் எழில்குமார். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீடு வாங்கும் போதே கார் கார்கிங்-ஐ சேர்ந்து வாங்கியதாக கூறியுள்ளார். இந்தநிலையில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வரும் அருண்குமாருக்கும், எழில்குமாருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எழில்குமார் புகார் அளித்த நிலையில், அருண்குமாருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டுடன் சேர்த்து கார் பார்க்கிங்கை வாங்கியதற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால், எழில்குமாருக்கு ஆதரவாக அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் அழைத்து காரை எடுக்க வேண்டும் என மிரட்டியதாக எழில்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மதுரவாயலில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க எழில்குமார் சென்ற நிலையில், அருண்குமார் தமது நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கிங் பகுதியில் இருந்த காரை வெளியே எடுத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் சாலையோரம் காரை விட்டு சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்க்கிங் பிரச்சனையில் காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாதிக்கப்பட்ட எழில்குமார், பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். சொந்தமாக வீடு வாங்கி நிம்மதியின்றி தவிக்கும் தங்களுக்கு உரிய நீதி வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.