உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சிறுமிக்கி நேர இருந்த அசம்பாவிதத்தை சரியான நேரம் பார்த்து குரங்குகள் சீறிப்பாய்ந்ததால் சிறுமி தப்பித்த சம்பவம் பேசு பொருளாக மாறியிருக்கு. பாக்பத்தின் தௌலா என்ற கிராமத்தைச் சேர்ந்த யுகேஜி படிக்கும் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுமி விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் யாரும் இல்லாததைக் கவனிக்கவே, உடனடியாக சிறுமியை மிரட்டி அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு சிறுமியை கடத்தி சென்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக வந்த குரங்குகள் கூட்டம் அந்நபரின் மீது ஆக்ரோஷமாக சீறிப்பாயவே, அலறியடித்துக் கொண்டு அந்த அடையாளம் தெரியாத நபர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு துண்டைக் காணோம் துணியக் காணோம் என தலை தெறிக்க ஓடியுள்ளார்.இதையடுத்து குரங்குகளின் உதவியால் அவ்விடத்திலிருந்து தப்பித்த சிறுமி தனது வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளார். அவரது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்ததை ஒன்று விடமால் கூறிய சிறுமி தன்னை எப்படி குரங்குகள் காப்பாற்றியது என்பது வரை விவரமாக எடுத்துக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு பதைபதைத்த சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.போலீசார் குற்றவாளியின் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமிக்கு நடக்கவிருந்த அசம்பாவிதத்தை தக்க சமயத்தில் குரங்குகள் வந்து காப்பாறிய சம்பவம் கேட்போரை பெரும் ஆச்சரியத்தையில் ஆழ்த்தியிருக்கு. சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் நடுரோட்டிலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணிற்கு உதவாமல் அதனை வீடியோவாக பதிவு செய்த சில மனித மிருகங்களுக்கு இடையில். சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் ‘மிருகத்துக்குள்ளும் மனிதம் இருக்கிறது’ என நம் முகத்தில் அறையும் விதமாக சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.